ஈகைக்காக கைகோத்த இளையர் கூட்டம்

முஸ்லிம்கள் முக்கியமெனக் கருதும் இன்னோர் செயல், ‘ஸகாத்’ எனப்படும் ஈகைப் பண்பு.

இந்த ரமலான் மாதத்தில் வசதி குறைந்தோருக்கு நிதியாகவோ பொருளாகவோ ஆதரவு வழங்குவதை முஸ்லிம்கள் தங்களின் கடமையாகக் கருதுகின்றனர்.

கொவிட்-19 பரவல் முறியடிப்புத் திட்டம் காரணமாக இவ்வாண்டு வீடுகளைவிட்டு வெளியேற முடியாத சூழலிலும் நன்கொடை வழங்குவதும் ஆதரவுக்கரம் நீட்டுவதும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை.

பல்வேறு அமைப்புகளுடன் தனிமனிதர்களும் தொண்டூழியத்தில் ஈடுபட்டனர். இவ்வாண்டு பல புதிய ஆதரவுத் திட்டங்களையும் ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்கள் மேம்படுத்தப்பட்டதையும் காணமுடிந்தது.

அந்த வகையில், ‘இந்திய முஸ்லிம் ஒருங்கிணைப்பு (ஐஎம்சி)’ எனப் புதியதோர் இளையர் அமைப்பு இவ்வாண்டு உதயமானது.

சமூக மேம்பாட்டிற்குத் தரவு மூலம் பங்களிப்பது, இளையர்களுக்கு ஊக்கமளிப்பது, மரபுடைமையைக் காத்து, வளர்த்து, பகிர்வது என மூன்று அம்சங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்தவிருக்கிறது.

முதல் பணியாக, ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்புடன் சேர்ந்து அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றும் துப்புரவாளர்கள் ஆயிரம் பேருக்கு அன்பளிப்புப் பைகளை இந்த அமைப்பு வழங்கியது.

“ரமலான் மாதத்தில் நண்பர்கள் சிலரோடு தொலைபேசி மூலம் கலந்துரையாடி, இந்த புதிய அமைப்பிற்கான தேவையை உறுதிப்படுத்தினோம். குறிப்பாக இளையர்களை முன்னிறுத்தி, அவர்களின் தேவைகளுக்கும் சிந்தனைக்கும் உரமூட்டும் ஓர் அமைப்பு தேவைப்படுவதை நாங்கள் உணர்ந்தோம்,” என்றார் அமைப்பின் தலைவர் குமாரி ஃபஹிமா ஃபர்ஹா.

பேச்சோடு நின்றுவிடாமல் உடனே களப்பணியிலும் இறங்கியது இந்த இளையர் படை.

“டி-சட்டை, கைலி, துண்டு, முறுக்கு, ரொட்டி, பலகாரம், அத்தர் வாசனைத் திரவியம் என வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி, அவற்றை ஒன்றுசேர்த்து, அன்பளிப்புப் பையாக வழங்கினோம்,” என்றார் குமாரி ஹாஃபிஸா.

அத்துடன், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட மூன்று நகர மன்றங்களைச் சேர்ந்த துப்புரவாளர்களுக்கும் அன்பளிப்புப் பைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய முஸ்லிம்களுக்கு உதவி

‘சிம்ப்லி இஸ்லாம்’ அமைப்பு, 30 இந்தியக் குடும்பங்கள் உட்பட 300 குடும்பங்களுக்கு $200 மதிப்புள்ள ‘ரமலான் கூடை’யை அன்பளிப்பாக வழங்கியது.

“அறிந்தவர்கள் மூலம் வழக்கமாகக் கிடைக்கும் நிதியாதரவு இம்முறை கிட்டவில்லை. அதற்கு ஈடாக, ‘சிம்ப்லி இஸ்லாம்’ அமைப்பு, ரொக்கப் பணத்துடன் உணவுப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கி பேருதவி புரிந்துள்ளது,” என்றார் பயனாளிகளில் ஒருவரான திரு முகம்மது சலீம்.

மக்களிடம் திரட்டப்படும் ஸகாத் நிதியைக் கொண்டு இச்சேவையை 13வது ஆண்டாக வழங்குகிறது ‘சிம்ப்லி இஸ்லாம்’ அமைப்பு.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், வசதி குறைந்த இந்திய முஸ்லிம் குடும்பங்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதில் எந்தச் சிரமத்தையும் எதிர்நோக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் 400 குடும்பங்களுக்குத் தலா $120 ரொக்க அன்பளிப்பை வழங்கி இருக்கிறது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு சைவ, அசைவ பிரியாணி, பொறித்த சோறு உணவு வகைகளை ஊழியர்களுக்கு வழங்குகிறது ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ என்ற சமூக நல அமைப்பு படம்: ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சைவ, அசைவ பிரியாணி, பொறித்த சோறு உணவு வகைகளை ஊழியர்களுக்கு வழங்குகிறது ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ என்ற சமூக நல அமைப்பு படம்: ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’

பெருநாளை முன்னிட்டு, நேற்று முன்தினத்தில் இருந்து நாளை 25ஆம் தேதி வரை 17,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறது ‘இட்ஸ்ரெயினிங்ரெயின்கோட்ஸ்’ என்ற சமூக நல அமைப்பு.

உணவுப் பொட்டலங்கள், மளிகைப் பொருட்கள், புத்தாடைகள், பலகாரங்கள், ரொக்கம் எனப் பல வழிகளில் தனிமனிதர்களும் அமைப்புகளும் ஆதரவளிப்பது, சமூகத்தில் அனைவரும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுத்துள்ளது.

செய்தி: இர்ஷாத் முஹம்மது, எஸ்.வெங்கடேஷ்வரன்