முதன்முறையாக பெருநாளன்று திறந்திருக்கும் உணவகங்கள்

கடந்த 22 ஆண்டுகளாக 24 மணி நேர சேவையை வழங்கி வரும் மெக்பர்சன் ரோடு ஜுலைஹா முஸ்லிம் உணவகம் (படம்), நோன்புப் பெருநாளன்று மட்டும் மூடப்படும். பெருநாளை ஒட்டி, ஊழியர்களுக்கு ஓய்வுகொடுக்கும் வகையில் சராசரியாக நான்கு நாட்களுக்கு அந்த உணவகம் மூடப்படும் என்று அதன் உரிமையாளர் திரு சஹாபுதீன் முஹம்மது கனி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த ஆண்டு நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருப்பதால் ஊழியர்கள் எங்கும் செல்ல முடியாது. அதனால் இவ்வாண்டு பெருநாளன்று கடையைத் தொடர்ந்து நடத்துமாறு அந்த நிறுவனத்தின் ஊழியர்களே பரிந்துரை செய்ததாகவும் அதனால் இன்றும் கடை திறந்திருக்கும் என்றும் திரு சஹாபுதீன் கூறினார்.

கிளமெண்டி வட்டாரத்தில் உணவகம் நடத்தி வரும் திரு அ.மு.மைதீனும் பெருநாளான இன்று கடையை மூடவில்லை.

“வழக்கமாக பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதுவிட்டு குடும்பத்தோடு நேரம் செலவிடுவோம். இவ்வாண்டு வீட்டிலேயே தொழுகிறோம். ரமலான் முழுவதும் குடும்பத்தோடு நிறைய நேரம் செலவிட்டிருக்கிறோம். இந்தப் பெருநாளுக்கு வியாபாரம் நடக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் திறந்து பார்ப்போமே என்று நினைக்கிறேன்,” என்றார் அவர்.

வெஸ்ட் கோஸ்ட் பகுதியில் ரோஜாக் கடை நடத்திவரும் திரு முசாகுதீன், “வியாபாரம் குறைந்து வரும் நிலையில் செலவினங்களைச் சமாளிக்க கடையைத் திறப்பது நல்லதென நினைக்கிறேன்,” என்று சொன்னார்.