மகிழ்ச்சி, நிம்மதி, புத்துணர்வு

பேரனைப் பார்க்கத் தவித்த தாத்தா, பாட்டிகள்

திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஷோபனா-மோகன் தம்பதியருக்கு டருண் பிறந்த ஏப்ரல் 3ஆம் நாள் அன்றுதான், நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

பேரனைத் தூக்கி மகிழ ஆசை ஆசையாய்க் காத்திருந்த தாத்தா பாட்டிகளுக்கும், பிள்ளையை வளர்க்க பெற்றோரின் துணையையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்த்திருந்த இளம் தம்பதியருக்கும் பேரிடி விழுந்தது போலிருந்தது.

பேரனை எப்படிப் பார்ப்பது என்று தவித்த தாத்தா, பாட்டிகளுக்கும் பிறந்த குழந்தையோடு திண்டாடிப்போன தம்பதியிருக்கும் இப்போதுதான் மூச்சு வந்தது போலிருந்தது. ஜூன் 2ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் மோகன், ஷோபனா இருவரது பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் வீட்டுக்கு விரைந்தனர். கைகளைக் கழுவியதும் பேரனைத் தூக்கி ஆசைதீரக் கொஞ்சி மகிழ்ந்தனர்.

“காணொளி மூலம் தினமும் பார்த்துப் பேசினாலும், பக்கத்தில் இருந்தும் நேரில் பார்க்க முடியாதது மிகவும் கொடுமை,” என்றார் ஓட்டுநராகப் பணிபுரியும் திரு மோகனின் தந்தை திரு ஜெயபாலன், 67.

டருணை நேரில் பார்த்து, அவன் நலமாக இருப்பதை அறிந்த பிறகுதான் திரு மோகனின் தாயார் 60 வயது சாந்திக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

டருணை இனி தங்கள் வீடுகளுக்குத் தூக்கி வரலாம் என்ற எண்ணமே இரு தாத்தா, பாட்டிகளுக்கும் பேரானந்தமாக இருக்கிறது.

“பெரியவர்களின் அருகாமையும் அவர்கள் உடனிருப்பதும் ஒருவகையில் நம்பிக்கை தருகிறது. பேரனைப் பார்த்து அவர்கள் மகிழ்வது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

“ஆனாலும், என் மகனின் முதல் சிரிப்பையும் அவன் தலையைத் தூக்கியதையும் அவனது தாத்தா பாட்டிகளால் காண முடியவில்லை. குழந்தைக்கு 30வது நாள் சடங்குகளையும் பெரியவர்கள் உடனிருந்து செய்ய முடியவில்லை,” என்று கொஞ்சம் வருத்தப்பட்டார் 31 வயது திருமதி ஷோபனா நடராஜா.

நோய்ப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டம் தொடங்க சில நாட்களே இருந்த நிலையில், குழந்தையைக் குளிப்பாட்டுவது முதல், பிள்ளைப்பேறு காலத்தில் தான் செய்யவேண்டியவை எல்லாவற்றையும் தாமும் தம் கணவரும் அவசர அவசரமாகக் கற்றுக்கொள்ளவேண்டி இருந்ததாகக் கூறினார் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரான திருமதி ஷோபனா.

“என் மனைவி முழுமையாக ஓய்வில் இருக்கவேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளை எல்லாம் நானே செய்தேன். தொலைத்தொடர்பு வசதி மூலம் குழந்தையைப் பார்த்துக்கொள்வது தொடர்பான சந்தேகங்களை அம்மா, மாமியாரிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபெறுவேன்,” என்றார் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு நிர்வாகியாகப் பணிபுரியும் 36 வயது மோகன் ஜெயபாலன்.

நாங்கள் காத்திருந்து பெற்ற எங்கள் மகனை உற்றாரும் உறவினரும் சூழ்ந்து கொண்டாட முடியாத சூழ்நிலை எங்களுக்கு வருத்தம் அளித்தது. நோய்ப்பரவல் முறியடிப்புக் காலக்கட்டம் குறித்த தொடக்ககால குழப்பத்தால் குழந்தைக்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய அவசரமும் ஏற்பட்டது,” என்றார் திரு மோகன்.

“கிருமிப்பரவல் நிலவரம் இன்னும் முழுமையாகச் சரியாகவில்லைதான். என்றாலும், இருட்டுச் சுரங்கத்தின் இறுதி முனையில் தென்படும் ஒளி வட்டத்தைப் போல டருண் எங்களது வாழ்வில் மிளிர்கிறான். அவன் முகத்தைப் பார்க்கும்போது இந்தச் சிரமமான காலத்தால் ஏற்பட்ட கவலைகள் எல்லாம் காற்றாய்ப் பறக்கின்றன,” என்றார் பாட்டியான மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் திருமதி ஷோபனாவின் தாயார் திருமதி லீலாவதி.

திருமதி ஷோபனாவின் பெற்றோருக்கு டருண் முதல் பேரக்குழந்தை. திருமதி லீலாவதிக்கு பிறந்த அன்று பேரனைத் தூக்க முடியவில்லை என்ற வருத்தம்.

“அன்று, என் மகள் வார்டு அறைக்கு வரும்வரை நாங்கள் 10 மணி நேரம் காத்திருந்தோம். ஆனால், கடைசியில் வருகையாளர் நேரம் முடிந்துவிட்டது என்று கூறி கே கே மருத்துவமனை எங்களை வீட்டுக்குப் போகும்படி சொன்னது. பிறகு காணொளி அழைப்பு மூலமாகத்தான் மகளை நாங்கள் பார்த்தோம்,” என்றார் “அடுத்த நாள்தான் அவனைத் தூக்கினோம். அப்போதும் ஒவ்வொருத்தராகத்தான் அனுமதித்தார்கள். குடும்பமாக எல்லாரும் குழந்தையைச் சூழ்ந்து நிற்க வேண்டிய இனிய தருணம் கடைசியில் எங்களுக்கு வாய்க்கவில்லை,” என்றார் திருமதி லீலாவதி

தனியாக மகளும் மருமகனும் எப்படி பிள்ளையைப் பார்த்துக்கொள்வார்கள் என்று இந்த இரண்டு மாத காலமும் அதிகம் கவலைப்பட்டதாகக் கூறினார் ஷோபனாவின் தந்தை திரு நடராஜா, 62.

“மருமகன் மோகன், என் மகள் மீதும் பேரப்பிள்ளை மீதும் வைத்திருக்கும் அளவற்ற அன்பையும் அவரது கடமையுணர்வையும் இக்காலக்கட்டம் எங்களுக்கு உணர்த்தியது,” என்றார் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரியும் திரு நடராஜா.

இதுபோன்ற நோய்ப்பரவல் டருணின் வாழ்நாளில் இனி ஏற்படக்கூடாது என்பதே குடும்பத்தினர் அனைவரதும் பிரார்த்தனை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!