சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்ட ஊழியர்

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குமுன் ஹோட்டல் துறையில் சேர்ந்தவர் குமாரி ரா.சுகுணா.

ஒரே ஹோட்டலுடன் பழக்கப்பட்ட வேலை, சூழல் ஆகியவற்றை பல ஆண்டுகளாக அனுபவித்தவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் அனைத்தையும் மாற்றியது.

இங்கு கொவிட்-19 நிலவரம் மோசமடைய, சுற்றுப்பயணிகளின் வருகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பாக இயங்கி வந்த ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களின்றி திண்டாடுகின்றன.

“சார்ஸ் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நிலவரம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சார்ஸ் காலகட்டத்தில் சுற்றுப் பயணிகளின் வருகை குறைந்ததே தவிர இந்த அளவிற்கு மோசமடையவில்லை. இப்போது நிலைமை இப்படி ஆகும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை,” எனக் கூறினார் முதல்நிலையில் பணியாற்றும் மூத்த ஹோட்டல் நிர்வாகியான குமாரி சுகுணா, 57.

சுற்றுப்பயணத் துறையில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், இவர் வேலை பார்க்கும் ‘சுவிஸ் ஹோட்டல் தி ஸ்டாம்ஃபர்ட்’, அதன் ஊழியர்களின் வேலைகளை பாதுகாக்க ‘டேரி ஃபார்ம்’ குழுமத்துடன் கைகோத்தது.

அதன்படி, டேரி ஃபார்ம் குழுமத்தின்கீழ் இயங்கும் சில்லறை விற்பனைக் கடைகளில் காசாளர், கடை உதவியாளர் போன்ற பணிகளில் ஹோட்டல் ஊழியர்கள் தற்காலிகமாக ஈடுபடுவர். அவர்கள் செய்யும் பணி வேறுபட்டது என்றாலும் இதுவரை அவர்கள் பெற்று வந்த சம்பளத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

ஹோட்டல் ஊழியர்களை வேறொரு பணியில் ஈடுபடுத்தும் இத்திட்டத்தில் தற்போது ஏழு ஹோட்டல்கள் சேர்ந்துள்ளன.

“சுற்றுப்பயணத் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இக்காலகட்டத்தில் எங்களது சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதல் ஊழியர்களுக்கான தேவை ஏற்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவெடுத்தோம்,” என்று டேரி ஃபார்ம் குழுமத்தில் தென்கிழக்காசியப் பிரிவின் மனிதவள இயக்குநர் ஜெனிஃபர் லீ தெரிவித்தார்.

டேரி ஃபார்ம் குழுமத்தின்கீழ் இயங்கும் ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ பேரங்காடியில் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து விற்பனை உதவியாளராக குமாரி சுகுணா பணியாற்றி வருகிறார்.

விற்பனைப் பொருட்களை அடுக்குகளில் நிரப்புவது, பேரங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பதிவுசெய்வது, வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது போன்ற பணிகளில் இவர் ஈடுபடுகிறார்.

“வேலை சூழல் மாறிவிட்டது. ஆனால் மக்களுடன் நாங்கள் கொண்டுள்ள தொடர்பு மாறவில்லை. புதிய வேலையில் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது. மக்கள் அதிகமாக வரும் இடமாக பேரங்காடிகள் உள்ளன. அவர்களுக்குச் சிறந்த சேவையைப் பொறுமையுடன் வழங்குவதில்தான் என் கவனம் உள்ளது,” என்றார் குமாரி சுகுணா.

பழைய வேலையிட அனுபவங்கள் அவ்வப்போது கண்முன்னே நிழலாடினாலும் இப்போதைய வேலையை ஒரு புதிய அனுபவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் முக்கியம் என்றார் இவர்.

“பேரங்காடிக்குள் நுழையும்போது தங்களது விவரங்களைப் பதிவுசெய்வதில் மூத்தோருக்கு சிரமம் ஏற்படலாம். ஆனால் பதிவுசெய்யும் முறையை என்னிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளும்போது எனக்கு ஒருவித திருப்தி கிடைக்கிறது. புதிய வேலையை மகிழ்ச்சியுடன் அணுக முடிகிறது,” என்றார் குமாரி சுகுணா.

இப்பணியில் தாம் மூன்று மாதங்களுக்கு மேலாக ஈடுபடலாம் எனத் தாம் எதிர்பார்ப்பதாகச் சொன்ன இவர், இவ்வாண்டு பிற்பாதியில் நிலவரம் சீராகி ஹோட்டல் வேலைக்கு மீண்டும் திரும்ப முடியும் என நம்பிக்கை கொண்டு உள்ளார்.