இதயத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடியவர்

"மனநிறைவு என்பது வாழ்க்கையில் தானாக ஏற்படாது. நாம்தான் தேடிப் பெறவேண்டும். மேலும் சாதிக்கவேண்டும் என்ற உணர்வையும் எனது மீள்திறனையும் நோய்வாய்ப்பட்ட காலம் எனக்கு தந்துள்ளது. நான் பட்ட வேதனைகளைப் பற்றி அதிகம் எண்ணுவதே இல்லை. என் சிந்தனை, பார்வை அனைத்தும் முன்னோக்கியே உள்ளது," என்கிறார் திரு சுப்ரமணியம் ராஜேந்திரன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 24 வயதில் மீண்டும் பலதுறை தொழிற்கல்லூரியில் சேர்ந்த சுப்ரமணியம் ராஜேந்திரன் இறுதியாண்டு திட்டப்பணி வேலைகளை செய்துகொண்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி. குடும்பத்தினர் உறவினரைக் காணச் சென்றிருந்ததால் அவர் வீட்டில் தனியாக இருந்தார். திடீரென நெஞ்சு வலி ஏற்பட உடனே ஆம்புலன்சை தொலைபேசியில் அழைத்தார். அதன்பின்னர் என்ன நடந்தது என அவருக்குத் தெரியாது. மயங்கிவிட்டார். அச்சமயத்தில் வீட்டிற்கு வந்த அவரது பெற்றோரும் தங்கையும் மயங்கிக் கிடந்த அவரைப் பார்த்து பதைபதைத்தனர். அதேநேரத்தில் ஆம்புலன்சுடன் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட மணிக்கு ஐந்து தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டது.

ஐந்து நாட்களுக்குள் அவருக்கு இதயத்துடிப்பு சீர்படவில்லை என்றால் உற்றார் உறவினருக்குச் சொல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறினர்.

‘எக்மோ’ உயிர்காப்புக் கருவி இணைக்கப்பட்ட நிலையில் இருந்த மணியின் இதயத்துடிப்பு மூன்று நாட்களுக்குப் பிறகு திரும்பியது. ஆயினும் அவர் பன்னிரண்டு நாள் ‘கோமா’ நிலையில் இருந்தார்.

“மருத்துவமனையை ஐந்து நிமிடம் தாமதமாக அடைந்திருந்தாலும் இந்நேரம் என் அண்ணன் உயிரோடு இருந்திருக்கமாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்,” என்று மணியின் தங்கை கவிதா கூறினார்.

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த மணிக்கு அடுத்த சிக்கல்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்றபோது, மணியின் உள் வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. எந்தச் சிகிச்சையும் பலனிக்கவில்லை. ரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் (முழுமையான ‘கேஸ்டிரேக்டமி’) அவரது வயிற்றை அகற்றினர்.

அதற்கு அடுத்து மணியின் சிறுநீரகங்கள் செயலிழந்தன. அதனால் ரத்த சுத்திகரிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரது கவலையை மேலும் அதிகரிக்க விரும்பாத மணியின் பெற்றோர், வயிறு அகற்றப்பட்டது குறித்து அவரிடம் சொல்லவில்லை.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிகிச்சை பெற்ற மணி, பின்னர் ‘செயின்ட் லியூக்ஸ்’ மருத்துவமனையில் மூன்று மாதம் தங்கினார். பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு, தொடர்ந்து கடுமையான மருந்துகளை சாப்பிட்டு வந்ததால், ஹாலுசினேஷன் எனப்படும் ஒருவகையான மனநலப் பிரச்சினையும் ஏற்பட்டது.

மனநல சிகிச்சைக்குப் பின்னர் அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தார்.

அதுநாள் வரையில் எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல் சுறுசுறுப்பாக வளைய வந்த மகனுக்கு அடுத்தடுத்து உறுப்புகள் பாதிக்கப்படவும் பெற்றோர் துவண்டு போனார்கள்.

“அண்ணன் இத்தனை இன்னல்களுக்கு உள்ளாவதைக் கண்ட அப்பா, அம்மா இருவருக்கும் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டு விட்டது. இடையில் அப்பாவுக்கும் மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்,” என்று அக்காலகட்டத்தை நினைவுகூர்ந்தபோது, அந்த நினைவுகளால் கவிதாவின் குரல் நடுங்கியது.

லாரி ஓட்டுநராகவும் பாதுகாவல் அதிகாரியாகவும் வேலை பார்த்து வந்த மணியின் அப்பா, 56 வயது ராஜேந்திரன் அழகனுக்கு 2011ல் கழுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்து அவரால் வேலைக்குப் போக முடிவதில்லை. அரசாங்க ஊழியராகப் பணிபுரியும் மணியின் தாயார் 54 வயது எம். சுசிலா ஒருவரது சம்பாத்தியத்தை குடும்பம் நம்பியிருந்தது.

“அண்ணன், அப்பா இருவரையும் கவனித்துக்கொண்டு, வேலைக்குச் சென்று, குடும்பத்தையும் அம்மா கவனித்துக்கொண்டார். மன உளைச்சல்களுக்கிடையே, தைரியத்தோடு அவர் செயல்பட்டார்,” என்றார் கவிதா.

தொடர்ந்து பல சிக்கல்கள் ஏற்பட்டபோதும் மணிக்காக அவரது குடும்பத்தினர் அனைவரும் நிதானம் காக்க உறுதிபூண்டனர். “குறிப்பாக, அப்பா, அண்ணனுக்கு தைரியமூட்டுவார். எப்போதும் முன்னோக்கி சிந்திக்கும்படி அறிவுறுத்துவார்,” என்றார் கவிதா.

பெற்றோரும் சகோதரியும் கொடுத்த ஊக்கத்தால் 2018ஆம் ஆண்டு மணி பலதுறை தொழிற்கல்லூரிக்கு மீண்டும் திரும்பினார். அப்போது நிரலிடுதல் போன்ற சில பாடங்களில் மிகவும் சிரமப்பட்டதாக மணி கூறினார்.

“ஏரோஸ்பேஸ் துறையில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. ஆயினும், வேலை வாய்ப்புப் பெற ஒரு கல்வித்தகுதிச் சான்றிதழ் தேவைப்படுவதால் எப்படியேனும் படிக்க வேண்டும் என உறுதியோடு இருந்தேன்,” என்றார் மணி.

படிப்பில் கவனம் செலுத்தி அதேநேரத்தில், உடல்நலனை மீட்டெடுப்பதிலும் தீவிரம் காட்டத் தொடங்கினார் மணி.

சில நல்ல நண்பர்களின் முயற்சியால் மீண்டும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கினார். நண்பர்களும் துணைவி ஜெயந்தியும் சிரமமான காலங்களில் தமக்கு பக்கபலமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

லோயாங்கின் எஸ்ஏஇஎல்எஸ், எஸ்டி ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் ஆகிய இடங்களில் வேலைப் பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கு கடுமையான வேலைகளைத் தயங்காமல் செய்ததாகக் கூறினார்.

“உடல்நலப் பிரச்சினைகளால் எனது வேகம் குறைவதை நான் விரும்பவில்லை. எனது வயிற்றுப்பகுதி அகற்றப்பட்டிருந்ததால் ஒவ்வொரு நாளும் உணவு உட்கொண்ட பிறகு நான் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓய்வு எடுத்து, எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நான் இந்தப் பிரச்சினைகளைப் பெரிதாக நினைப்பதே இல்லை,” என்றார் 30 வயதாகும் மணி.

“மனநிறைவு என்பது வாழ்க்கையில் தானாக ஏற்படாது. நாம்தான் தேடிப் பெறவேண்டும். இந்த வயதில் பட்டயம் பெற்றதை நினைக்கும்போது எனக்கு ஓரளவு திருப்தியாக உள்ளது. ஆனாலும் அது போதாது. மேலும் சாதிக்கவேண்டும் என்ற உணர்வையும் எனது மீள்திறனையும் நோய்வாய்ப்பட்ட காலம் எனக்கு தந்துள்ளது. அத்துடன் பக்கபலமாக இருந்த என் குடும்பத்தினரின் அருமையை நான் மேலும் உணர்ந்தேன். அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்துகொண்டேன். நான் பட்ட வேதனைகளைப் பற்றி எண்ணுவதே இல்லை. என் சிந்தனை, பார்வை அனைத்தும் முன்னோக்கியே உள்ளது,” என்றார் உறுதியான நம்பிக்கையுடன் மணி.

மணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் இதய நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜிம்மி ஹோன், பல்வேறு சிக்கல்களைக்கொண்ட கரடுமுரடான பாதையை அவர் கடந்து வந்திருப்பதாகத் தெரிவித்தார். மரண அபாயத்திலிருந்து மீண்டு வந்த இவர், தற்போது நம்பிக்கையுடன் வாழ்க்கையில் வெற்றிகளைக் காண்பதைக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்வதாகக் கூறினார்.

கொவிட்-19 கிருமிப் பரவலால் மே 5ஆம் தேதி நடக்கவிருந்த பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. ஆயினும், சமூக ஊடகங்களின் வாயிலாக தமக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்திருக்கும் மணி, தற்போது ‘கிராப்’ ஒட்டி வருகிறார். மனந்தரளாமல் எதையும் விவேகத்துடன் செய்வதே தமது இலக்கு எனக் கூறும் மணி, வர்த்தகராகும் எண்ணம் கொண்டிருக்கிறார்.


தப்பிப் பிழைத்த சுப்ரமணியம் ஓர் அரிதான எடுத்துக்காட்டு

திரு சுப்ரமணியத்துக்கு ஏற்பட்ட மருத்துவப் பிரச்சினை குறித்து தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் வயிறு, மேற்குடல் அறுவை சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் டாக்டர் அசிம் ஷபிர் விளக்கம்:

குறுகிய நேரத்தில் இத்தனை மாரடைப்புகள் ஏற்பட்டு உயிர் பிழைப்பது சாத்தியமா?

திரு சுப்ரமணியத்துக்கு வீட்டில் ஒரு முறையும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து முறையும் மாரடைப்பு ஏற்பட்டது. இத்தகைய நிலையில் ஒருவர் உயிர்பிழைப்பது அரிதானது. திரு சுப்ரமணியம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ரத்தம் உறைந்ததால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டதா?

திரு சுப்ரமணியத்தின் கெண்டைக் கால் தசையின் அசுத்த ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்திருந்தது. இத்தகைய நிலை (pulmonary embolism) காரணமாக சுத்த ரத்தம் நுரையீரலுக்குச் செல்லமுடியாமல் திடீரெனத் தடைப் பட்டது. பொதுவாக இப்படி ரத்தம் உறைவது சிறிய அளவில்தான் இருக்கும். அதனால் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்து இருக்காது. இருந்தாலும் நுரையீரல் பாதிக்கப்படும். உறைந்த ரத்தக் கட்டி பெரிதாகி, நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டால் மரணம் ஏற்படும்.

இவரது வயிறு ஏன் அகற்றப்பட்டது?

திரும்பத் திரும்ப ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டதால், அவருக்கு ECMO எனும் செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்படி நீண்ட காலத்துக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். ஏனெனில், போதிய அளவுக்கு ரத்தத்திலுள்ள கரியமில வாயுவை வெளியேற்றி, உயிர் வளியை உள்ளெடுக்கும் திறனை இதயமும் நுரையீரலும் இழந்திருக்கும்.

இதன் காரணமாக உடலுக்கு மிகவும் பாதகமான நிலை ஏற்பட்டு வயிற்றில் புண் வந்துவிடும். சுப்ரமணியத்திற்கு வயிற்றில் ரத்தம் கசியத் தொடங்கியதும் பலமுறை சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. ரத்தப் பெருக்கு அதிகமான நிலையில், அதைக் கட்டுப்படுத்த வயிற்றை முழுதாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

வயிற்றை அகற்றியதால், அவர் எதிர்நோக்கும் சிரமங்கள் என்ன?

வயிறு இல்லாமல் ஒருவர் சாப்பிடவும் உயிர் வாழவும் முடியும். இவரைப் போன்ற நோயாளிகள் மற்றவர்களைவிட மிகக் குறைவாகவே சாப்பிடவேண்டும், ஆனால் பல தடவைகள் உண்ண வேண்டும்.

புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உணவு செரிமானத் திற்குத் தேவைப்படுகின்றன. இவை இயற்கையாகவே வயிற்றுக்குள் இருப்பதால் வயிறு இல்லாத திரு சுப்ரமணியத்திற்கு இந்தப் பற்றாக்குறை உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்க திரு சுப்ரமணியத்திற்கு வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பும் ஊட்டச்சத்து அளித்தலும் அவசியம்.


மாரடைப்பும், ரத்தக் குழாய் நோய்களும் வராமல் காக்கலாம்

மாரடைப்பு, ரத்தக் குழாய் நோய்கள்: ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனிதரது இதயம் 72 முறை சுருங்கி விரிந்து ரத்தத்தை ரத்தக் குழாய்களுக்கு அனுப்பும். இதைத்தான் இதயத் துடிப்பு என்கிறோம். ஒருநாளுக்கு அவ்வாறு 100,000 முறை துடித்து, உடற்பாகங்கள் அனைத்திற்கும் ரத்தம் செல்வதை உறுதி செய்யும்.

ரத்தக்குழாய் நோய்: இதய ரத்தக் குழாய் நோய் பரவலாக ‘இதய நோய்’ (ஐசெமிக் ஹார்ட் டிசீஸ்) என்று அழைக்கப்படுகிறது. இதய ரத்தக் குழாய்கள் சுருங்கும்போது நெஞ்சில் அடைப்பு, மூச்சுத்திணறல், போதிய ரத்த ஓட்டம் இல்லாததால் களைப்பு போன்றவை ஏற்படுகின்றன. கொலஸ்ட்ரோல், கொழுப்பு ஆகியவை ரத்தக்குழாயில் தங்கிவிடும்போது அது சுருங்குகிறது.

மாரடைப்பு: உடலின் முக்கிய ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒன்றில் திடீரென ரத்த ஓட்டம் (கடுமையாக) தடைபடும்போது இதய நோய் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. குழாயின் குறுகலான பகுதியில் திடீரென ரத்தம் உறைவதால் அல்லது குழாயில் படிந்துள்ள கொழுப்புப் படிமம் சிதைவதால் இவ்வாறு ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதய தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது தடைபட்டு, அது மீண்டும் சீர்செய்யப்படாவிட்டால் அது இறந்துவிடும்.

விளைவுகள்: கடுமையான அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மரணம் ஏற்படும். உலகெங்கும் திடீர் மரணத்திற்கு மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. கடுமை குறைந்த அடைப்பு இதயத்தை பலவீனப்படுத்தி பின்னர் இதய செயலிழப்பை ஏற்படுத்தும், அங்கு உடலின் தேவைகளுக்கு போதுமான ரத்தத்தை இதயத்தால் செலுத்த முடியாததால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். ஒழுங்கற்ற அல்லது மெதுவான இதய துடிப்புகளும் ஏற்படலாம்.

சிங்கப்பூரில் இதய நோயும், புற்றுநோயும் மிக அதிகமான மரணங்களை ஏற்படுத்தும் முதல் இரண்டு நோய்களாக உள்ளன.

அறிகுறிகள்: நெஞ்சு வலி பொதுவான அறிகுறி. மார்பின் மையத்தில் அல்லது இடது பக்கத்தில் வலி ஏற்படலாம், கழுத்து, தாடை அல்லது இடது கை வரை வலி பரவலாம். சங்கடமான அழுத்தம், அழுத்துதல், வலி போன்றவற்றை உணரலாம். இது லேசாகவோ அல்லது கடுமையானதாகவோ இருக்கலாம்.

மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, படபடப்பு, வியர்த்தல், பதற்றம் போன்றவையும் ஏற்படலாம். பெண்கள் ஆண்களைவிடக் குறைவான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். மேலும் மாரடைப்புகளில் கால்வாசி மார்பு வலி அல்லது வேறு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் ஏற்படுகிறது. இதை ‘சைலன்ட் அட்டாக்’ என்பார்கள்.

காரணங்கள்: புகை பிடித்தல், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ‘ஹைப்பர்லிப்பிடேமியா’ எனப்படும் உயர் ரத்த கொழுப்பு கொலஸ்ட்ரால் ஆகிய நான்குமே மாரடைப்பு, ரத்தக்குழாய் நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள். உடற்பருமன், போதிய உடற்பயிற்சி இல்லாமை, மன உளைச்சல், அதிகரிக்கும் வயது ஆகியவையும் இந்நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

45 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் 55 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஒருவரின் தந்தைக்கோ அல்லது சகோதரர்களுக்கோ 55 வயதுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், தாயாருக்கோ அல்லது சகோதரிகளுக்கோ 65 வயதுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் கூடுதலாக இருக்கும்.

வராமல் தடுப்பது: மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம்.

- பழம், காய்கறிகள் அதிகம் உள்ள, குறைந்த கொழுப்பு உள்ள உணவு முறை.

- உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு. ஒருவருக்கு எத்தகைய உடற்பயிற்சி பாதுகாப்பானது என்பதை மருத்துவரிடம் உறுதி செய்ய வேண்டும்.

- புகைபிடித்தலைக் கைவிடுதல்.

இதய நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், குறைந்தது ஓராண்டுக்கு ஒருமுறை சோதனைகள் செய்ய வேண்டும். நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். மேல் விவரங்களுக்கு தேசிய சிங்கப்பூர் இதய சிகிச்சை மையத்தை தொடர்பு கொள்ளலாம்: 6704 2000, இணையத் தளம்: https://www.myheart.org.sg/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!