மூன்று மாதகாலம் சிங்கப்பூரில் அடைக்கலம்

பதினொரு நாள் கோவில் நிகழ்ச்சிக்காக கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி இந்தியாவிலிருந்து வந்த 54 பேர் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக சிங்கப்பூரிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சவுத் பிரிட்ஜ் சாலை, ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சகஸ்ர மகா சாந்தி யாகத்திற்காக திருவாரூர், கும்பகோணம், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து வேத பாடசாலை ஆசிரியர்கள் 14 பேரும் அவர்களின் மாணவர்கள் 40 பேரும் சிங்கப்பூர் வந்திருந்தனர். அவர்களில் பலரும் சிங்கப்பூர் வந்தது இதுவே முதன்முறை.

யாகம் முடிந்ததும் ஓரிரு நாட்கள் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்த்துவிட்டு மார்ச் மாத இறுதியிலேயே ஊர் திரும்புவது அவர்களின் திட்டம். ஆனால், கொவிட்-19 கிருமியின் சீற்றம் காரணமாக திட்டமிட்ட நேரத்தில் அவர்களால் ஊர் திரும்ப முடியாமல் போனது. இம்மாதம் 9, 10ஆம் தேதிகளிலேயே அவர்களால் தமிழகம் செல்ல முடிந்தது.

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அனைவரும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலிலும் சிராங்கூன் சாலை வடபத்திர காளியம்மன் ஆலயத்திலும் தங்கினர். அவர்களின் தங்கும் வசதி, உணவு ஏற்பாடுகள் அனைத்தையும் கோவில் நிர்வாகத்தின் உதவியோடு இந்து அறக்கட்டளை வாரியம் செய்தது.

இப்படியோர் இக்கட்டான நிலையில் தாங்கள் சிக்கிக்கொள்வோம் என நினைக்கவே இல்லை என்றார் வந்திருந்தவர்களில் ஒருவரான வேத பாடசாலை ஆசிரியர் திரு கார்த்திகேயசிவம், 40.

“சிறிய பயணமாக இருந்திருக்க வேண்டியது நீண்டுபோனதில் சிரமம் ஏதுமில்லை. நாங்கள் கேட்பதற்கு முன்னால் அனைத்தையும் வாரியம் எங்களுக்குச் செய்து கொடுத்தது,” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் திரு சிவம்.

சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க முடியாமல் போனதில் சிலருக்கு வருத்தம்தான் என்றாலும் எல்லாருக்கும் இது நல்ல அனுபவமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“அனைவரும் பாதுகாப்பாக ஊர் திரும்ப ஆவன செய்வதாக வாரியத்தினர் கூறினர். சொன்னபடிமுதல் விமானத்திலேயே எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர்,” என்று தொலைபேசி மூலம் மதுரை தியாகராசர் கல்லூரியிலிருந்து அவர் பேசினார்.

ஜூன் 9ஆம் தேதி மதுரை சென்ற விமானத்தில் 22 பேர் கிளம்பினர். எஞ்சியோர் மறுநாள் இன்னொரு விமானத்தில் திருச்சி சென்றனர்.

“குடிநுழைவுச் சோதனைக்கு முன்னரே மதுரை விமான நிலையத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்காகப் பரிசோதிக்கப்பட்டோம். அதன் பிறகு தனிமைப்படுத்தலுக்காக அரசு ஏற்பாடு செய்திருந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். இங்கு ஏழு நாட்களைக் கழித்தபின் வீட்டிற்குச் சென்று ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்,” என்றார் திரு சிவம்.

முதன்முறையாக விமானப் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்த 16 வயது மாணவ அர்ச்சகர் ஸ்ரீ சைலே‌ஷ், ஒருவழியாகத் தாயகம் திரும்பி விட்டதில் மனநிறைவு அடைந்ததாகக் கூறினார்.

“அர்ச்சகர்கள் அனைவருக்கும் கோவில்களிலேயே மூன்று வேளை உணவும் சமைத்து வழங்கப்பட்டது,” என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த.ராஜசேகர்.

“விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியதும் அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினோம். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வாரியத்தினரும் கோவில் நிர்வாகத்தினரும் அக்கறை எடுத்துக்கொண்டனர்” என்று திரு ராஜசேகர் சொன்னார்.

23ஆம் தேதி வரை சிறப்பு விமான சேவை

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களைச் சொந்த நாட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் இந்த மாதம் 23ஆம் தேதி வரை ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், தமிழகத்திற்குச் சிறப்பு விமானச் சேவைகளை இயக்கவிருக்கிறது.

அந்த வகையில், நாளை 15ஆம் தேதி மதுரைக்கும் 16, 21ஆம் தேதிகளில் திருச்சிக்கும் 20, 23ஆம் தேதிகளில் சென்னைக்கும் இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படும். கூடுதல் விவரம் தேவைப்படுவோர் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் இணையப் பக்கத்தை நாடலாம்.

அதுபோல, தமிழகத்தில் உள்ள சிங்கப்பூர்வாசிகளின் வசதிக்காக 15, 21ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்தும் 20, 23ஆம் தேதிகளில் சென்னையில் இருந்தும் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ இணையத்தளம் வழியாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!