சிரமமான காலத்தில் ஒற்றைப் பெற்றோருக்கு உதவி

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மணவிலக்கு பெற்ற பிறகு திருவாட்டி சிவா, வசிக்க வீடும் இல்லாமல், உதவிக்கு உறவுகளும் இல்லாமல் இரண்டு பிள்ளைகளுடன் திக்குத் தெரியாமல் நடுக்காட்டில் விடப்பட்டதுபோல் பரிதவித்தார்.

மகளுக்கு இருந்த வலிப்புப் பிரச்சினையால் வேலைக்குச் செல்ல முடியாத சூழல்.

எத்தகைய ஆதரவும் இல்லாமல் எங்கே போவது என்று தெரியாமல் திண்டாடிய ஒற்றைப் பெற்றோரான திருவாட்டி சிவா, “தக்க நேரத்தில் உதவி கிடைக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை என்னவாயிருக்கும் என நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை,” என்றார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் 'புரோஜெக்ட் ஸ்மைல்' என்ற நன்கொடை அமைப்பைப் பற்றி செய்தித்தாளில் படித்த அவர், அங்கே உதவி கோரி விண்ணப்பித்தார்.

“சமூக ஊழியர் ஒருவரும் அந்த அமைப்பை நிறுவியவரும் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தில் என்னைச் சேர்த்தனர்,” என்று திருவாட்டி சிவா கூறினார்.

வாடிக்கையாகக் கொடுக்கப்படும் வீட்டுப் பொருட்களுடன் தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற விழாக்காலங்களில் அரிசி, வெல்லம், பால் போன்ற பொருட்களும் இவருக்கு வழங்கப்படுகின்றன.

பொருளுதவியுடன் மன ரீதியிலான ஆதரவையும் இந்த அமைப்பினர் இவருக்கு வழங்கி வருகின்றனர்.

“பல ஆண்டுகளாக எனக்கு உதவி வரும் இந்த அமைப்பினர், எனது தேவைகளை நன்கு அறிந்து குடும்பத்தினரைப்போல என்னை வழிநடத்தி எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்.

“நான் சோர்வு அடையும்போதெல்லாம் என்னை உற்சாகம் மூட்டுவார்கள்,” என்றார் திருவாட்டி சிவா, 40.

கைத்தொழிலைக் கற்றுக்கொண்டு பொருளீட்டவும் இந்தத் திட்டம் அவருக்கு உதவியது.

“மேசைத் துணி, தோள் பை, முகக்கவசங்கள் ஆகியவற்றைச் செய்ய இந்த அமைப்பில் நான் கற்றுக்கொண்டேன்,” என்றார் இவர்.

“என்னால் வகுப்புகளுக்குப் போவது சிரமமாக இருந்தாலும், என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்படியேனும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வகுப்புகளுக்குச் செல்வேன்,” என்ற திருவாட்டி சிவா, தையல் வேலையில் சிறந்த தேர்ச்சி பெற்றதுடன் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

கொவிட்-19 நோய் முறியடிப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருந்த காலகட்டத்தில் தொண்டூழியர்கள் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்து அன்பு காட்டியதாக திருவாட்டி சிவா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

திருவாட்டி சிவா போன்ற வசதி குறைந்த ஒற்றைப் பெற்றோராக உள்ள பெண்கள், வருவாய் குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்களுக்கு 'புரோஜெக் ஸ்மைல்' உதவிக்கரம் நீட்டி அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பொருளுதவி தருவது மட்டுமல்லாமல் இந்த அமைப்பினர் திறன்களைக் கற்றுத்தரும் வகுப்புகளை நடத்தி அந்தப் பெண்கள் சுயமாக சம்பாதிக்கவும் வகை செய்கிறது. இத்தகைய வகுப்புகளின்மூலம் 100க்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாக 'புரோஜெக்ட் ஸ்மைல்' தமிழ் முரசிடம் தெரிவித்தது. 'புரோஜெக்ட் ஸ்மைல்' அமைப்பை contact@sgprojectsmile.org என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 82864748 என்ற எண்ணை அழைக்கலாம்.

கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் ஒற்றைப் பெற்றோருக்கு மேலும் பாதிப்பு

இதற்கிடையே, ஒற்றைப் பெற்றோர் பலரும் கொவிட்-19 நோய்ப் பரவல் காலத்தில் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக சிஏஎஸ் அமைப்பின் தலைவரும் நிதிச் சேவை நிர்வாகியுமான எம்.பி. செல்வம் தெரிவித்தார்.

‘ஹார்ட்ஃபுல் கிவர்’ திட்டத்தின் மூலம் மொத்தம் 156 குடும்பங்களுக்கு உதவி வழங்க அந்த அமைப்பு முற்படுவதாக அவர் கூறினார்.

“இதுவரை 66 குடும்பங்களுக்கு நாங்கள் ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களைக் கொடுத்து உதவி செய்துள்ளோம். எஞ்சியுள்ள 90 பேருக்கான உதவிப் பணிகளை ஆதரிக்க பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த அறப்பணிக்கு தொண்டூழியர்களை சிஏஎஸ் அமைப்பு வரவேற்கிறது. தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல் முகவரி: CASheartfulgiver@gmail.com

செய்தி: கி.ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!