சுடச் சுடச் செய்திகள்

பாலின சமத்துவத்திற்கு போராடிய ‘ஐஎன்ஏ’ வீராங்கனை ராசம்மா

மலாயாவின் ஈப்போ மாநிலத்தில் 1927ஆம் ஆண்டில் பிறந்த ராசம்மா நவரத்னம், தமது பதினாறு வயதில் அக்கா பொன்னம்மாவுடன் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது சிங்கப்பூர் ஜப்பானியர்களின் ஆட்சியில் இருந்தது.

பெண்களுக்கான ‘ஜான்சி ராணி’ படைப்பிரிவில் சேர்ந்த ராசம்மாவும் பொன்னம்மாவும் சிங்கப்பூரில் ராணுவப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், ரயில் வழியாக பர்மாவுக்குச் சென்றனர். அங்கிருந்து பிரிட்டிஷ் படைகளுடன் போரிட ஜான்சி ராணி படை திட்டமிட்டிருந்தது.

“போர்க்காலத்தின்போது ‘ஜான்சி ராணி’ படைப்பிரிவு இறுதியில் சண்டையிடவில்லை என்றாலும் அதன் உருவாக்கம் ஆரம்பகால பெண்களின் சமத்துவத்தைப் பிரதிபலிப்பதாக சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் இணை காப்பாளர் மிரியம் இயோ தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய அருள்பொருளகத்தில் நடைபெறும் ‘ஸூம் இன்ட்டு ஹிஸ்டரி’ என்ற நிகழ்ச்சி வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக தேசிய அரும்பொருளகத்தின் நினைவுப் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.

இதில் இடம்பெறும் பொருட்களில், சிங்கப்பூரில் பயிற்சி பெற்ற இந்திய தேசிய ராணுவ வீராங்கனை ராசம்மாவின் தொப்பி இடம்பெறுகிறது.

“போர்க்காலத்திற்குப் பிறகு ஆசிரியராகப் பணியாற்றிய ராசம்மா, பெண் ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்காகவும் பாடுபட்டார். அவருக்குள் இருந்த இந்த பாலின சமத்துவத்தை, இந்நிகழ்ச்சிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள அவரது ராணுவத் தொப்பி பிரதிபலிக்கிறது,”என்று திருமதி இயோ கூறினார்.

இந்த இணைய நிகழ்ச்சியில் ராசம்மாவைப் பற்றிய அங்கத்தைப் படைக்கும் மகாலட்சுமி சுதர்சனன், ராசம்மாவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்தவுடன், அவருடைய சாதனைகளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

“அச்சமும் குழப்பமும் கலந்த போர்க்காலத்தில், பதினாறு வயது பெண்ணியவாதியாக ராசம்மா இருந்திருக்கிறார். பெண்ணாகப் பிறந்து பெண்களுடன் போராடி பெண்ணியத்தின் பெரும் பொருளை அனைவருக்கும் எடுத்துக்கூறினார்,” என்றார் அவர்.

மலேசியாவிலேயே தங்கிய ராசம்மா தற்போது உயிருடன் இருக்கிறாரா என்பது அறியப்படவில்லை என்று தேசிய அரும்பொருளகம் கூறியது.

ராசம்மாவைப் பற்றிய அங்கம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் https://nmszoom intohistoryep4.peatix.com/ என்ற இணைப்பில் பதிவு செய்யலாம்.

ராசம்மாவைப் பற்றிய அங்கம் மட்டுமின்றி தேசிய சின்னம் கொண்ட அரிசி ‘குக்கர்’, சிங்கப்பூர் நகரின் தண்டம் (mace), சிங்கப்பூரின் பழங்குடி இனமான ‘ஓராங் லாவுட்’ மக்கள் பயன்படுத்திய கூடையால் செய்யப்பட்ட பொறி (basket trap), சிங்கப்பூர் கல் (Singapore Stone) ஆகியவையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon