சுடச் சுடச் செய்திகள்

நடந்தே சாதனை புரிந்த சமூக ஆர்வலர்

கொவிட்-19 நோய்ப் பரவலின் காரணமாக ஏப்ரல் மாதத்திலிருந்து மக்கள் வீட்டில் முடங்கி கிடந்த நேரத்தில் பலரும் மனவுளைச்சலுக்கு ஆளாகினர். மனவுளைச்சலைக் குறைக்க அவர்கள் உடற்பயிற்சி செய்தனர்.

அந்த வரிசையில், திரு மூர்த்தி பெருமாள் (படம்) 50 நாட்களில் 1,111,203 காலடிகள் நடந்து அண்மையில் சிங்கப்பூர் சாதனைப் புத்தக்கத்தில் இடம்பெற்றார்.

“நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு நடைப்பயிற்சி ஓர் எளிய, சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. மனவுளைச்சலைக் குறைக்கவும் அது உதவுகிறது.

“உடல் பருமனைக் குறைக்கவும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை நான் ஊக்குவிப்பேன்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றத்தின் புதிய, பழைய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான திரு மூர்த்தி.

2002ஆம் ஆண்டிலிருந்து வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்தின் துரித நடைப்பயிற்சி குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் ஜுன் 1ஆம் தேதி வரை இந்த முயற்சியை மேற்கொண்ட மூர்த்தி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 22,224 காலடிகள், அதாவது ஏறத்தாழ 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தார்.

நடைப்பயிற்சி மூலம் இவருக்கு நல்ல பலன் கிடைத்தது. நடைப்பயிற்சிக்கு முன்னதாக 69 கிலோ கிராம் எடையுடன் இருந்தார் திரு மூர்த்தி. ஆனால், நடைப்பயிற்சிக்குப் பிறகு அவரது எடை கிட்டத்தட்ட ஆறு கிலோ குறைந்து தற்போது 63.5 கிலோவாக உள்ளது.

காலை 7 முதல் 8.30 மணி வரையிலும் மாலை 6 முதல் 7.30 மணி வரையிலும் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தை நடப்பதற்கென ஒதுக்குவார் இவர்.

அதுபோக, மே 23 முதல் 31ஆம் தேதி வரை முன்களப் பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிப்பது உட்பட வசதி குறைந்த குடும்பங்களுக்கு நிதி திரட்டும் ‘வீவாக் ஃபார் எஸ்ஜி’ என்ற முயற்சியிலும் பங்கேற்றார் திரு மூர்த்தி, 51.

தினமும் தாம் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் திறன்பேசி செயலி வழியாக பதிவுசெய்து, நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டு வந்தார் இவர்.

பொறியாளராகப் பணிபுரியும் திரு மூர்த்தி, கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பிலிருந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணியாற்றி வந்தார். குடும்ப ஆதரவும் இவருக்கு பக்கபலமாக அமைந்தது.

“கடந்த சில ஆண்டுகளில் துரித நடைப்பயிற்சியில் கலந்துகொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும் மேலும் அதிகமானோர் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

“நம் இந்திய உணவுகள் சிலவற்றில் சர்க்கரை, கொழுப்பு அதிகமாக இருக்கும். அதனால் இந்தியர்கள் கட்டாயமாக உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்,” என்று திரு மூர்த்தி வலியுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon