சுடச் சுடச் செய்திகள்

தென்கிழக்காசிய வரலாறு குறித்த படைப்பு

கலாசாரங்கள் வெகுவிரைவாக மாறிவரும் இன்றைய நிலையில், தென்கிழக்காசிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழர்களின் அடையாளத்தில் கலை, சமயம், மொழி ஆகியனவை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இது குறித்து ‘கலாசார உரையாடல்கள்’ என்ற மெய்நிகர் காணொளி கலந்துரையாடல் ஒன்றை உள்ளூர் கலைக் குழுவான அப்சரஸ் ஆர்ட்ஸ் ஜூலை 29ஆம் தேதி ஏற்பாடு செய்தது.

ஹரிணி வி வழிநடத்திய இந்தக் கலந்துரையாடலில் எழுத்தாளர் வினித்தா ரமணியும் நடனக் கலைஞர்களான சீமா ஹரிகுமார், மோகனபிரியன் தவராஜா ஆகியோர் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்தியர்கள் வேற்று சிந்தனைகள் படைத்தவர்களாக இருக்கலாம் என்றும் இந்தியர்களின் அடையாளம் விரிவானது என்பதையும் சுட்டினார் ‘ரைஸ் மீடியா’ எழுத்தாளரான வினித்தா, 41.

“ஆர்வம், ஆசை, பெருமை இருந்தால் எப்போதும் எதை வேண்டுமானாலும் நாம் கற்றுக்கொள்ள முடியும். அது மொழியாக இருக்கட்டும், நம் அடையாளத்தைப் பற்றி கேள்விகள் கேட்டு நம் சொந்த அடையாளத்தை ஆராய்வதாக இருக்கட்டும், அதை உங்களால் செய்யமுடியும். வாழ்க்கையின் எந்த நிலையிலும் இறக்கும் வரை செய்யமுடியும். யாராலும் நம்மை நிறுத்தமுடியாது,” என்றார் வினித்தா.

இந்தியர் அடையாளத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த நடனம் ஒரு கருவியாக அமைந்ததாகவும் தமிழர் அடையாளத்தை வெளிப்படுத்த பல உத்திகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடனக் கலையைப் பயின்று வரும் சீமா.

“சமூகத்தினர் சிலர், அவர்களின் தமிழர் அடையாளத்தை சமயம் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். வேறு சிலர் மொழி மூலம் அதைச் செய்கின்றனர். இலங்கையில் மொழிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பல நாடுகளில் பார்க்க முடியாது,” என்று கூறிய சீமா, “மொழி ஒரு முக்கிய சான்று. இருந்தாலும் அது இல்லாமலேயே தமிழர் அடையாளத்தைக் வெளிக்காட்டலாம் என்பது என் கருத்து,” என்றார்.

தமிழ் மூதாதையர்களின் வரலாறு, தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கை நடைமுறை, தமிழர் பழக்க வழக்கங்கள் போன்றவையும் அந்த உரையாடலில் இடம்பெற்றன.

அப்சரஸ் ஆர்ட்ஸ் தயாரித்த ‘அன்யாசா’ எனும் நாட்டிய நாடகத்தை முன்னிட்டு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விக்டோரியா அரங்கில் அரங்கேற்றப்பட்ட அன்யாசா நாட்டிய நாடகம் இவ்வாண்டு சிஸ்டிக் இணையத்தளத்தில் ஜூலை 23 முதல் 31ஆம் தேதி வரை காட்சியளிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து லண்டன், லிவர்பூல், மான்செஸ்டர், பெங்களூர், சென்னை, கொழும்பு, கோலாலம்பூர் என பல நகரங்களில் இந்நாட்டிய நாடகம் மேடையேற்றப்பட்டது.

இந்தப் படைப்பு பெளத்த சமய நினைவுச் சின்னங்கள், வரலாறு, தத்துவங்கள் ஆகியவற்றை தத்ரூபமாக நடன வடிவில் சித்திரிக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் சோழர் காலத்தில் இருந்த குறிப்பிடத்தக்க தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் இந்தப் படைப்பில் காணலாம்.

பண்டைய கால தென்கிழக்காசியாவில் இருந்த தமிழ்மொழி பயன்பாடு, சமகால புலம்பெயர்ந்தவர்கள், இடமாறுவதற்காக மக்கள் பயணம் செய்த வரலாற்று நிகழ்வுகள், அடையாளங்களின் பரிணாம வளர்ச்சி ஆகிய அம்சங்களும் இந்தப் படைப்பில் இடம்பெறுகின்றன.

பாரம்பரிய இந்திய இசை உட்பட சிங்கப்பூர் சீன இசைக்குழு வாசித்த சீன இசைக் கருவிகளும் ஒன்றுசேர்ந்து நடனத்துடன் இசை விருந்தளித்தன.

“அப்சரஸ் ஆர்ட்ஸ் கலைக் குழுவின் நடனப் படைப்புகள் அனைத்துமே புதுமையானது. சமயம் சார்ந்ததை மட்டுமல்லாது சமூக கருத்துகளையும் சொல்லக்கூடிய புதுமையான வட்டாரமாக தென்கிழக்காசியா அதன் அடையாளத்தை உருவாக்கி வருகிறது.

“பெளத்த சின்னங்களை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த நாட்டிய படைப்பு அன்யாசா,” என்றார் அன்யாசாவின் நடன அமைப்பாளரும் ஆடை வடிவமைப்பாளருமான திரு மோகனபிரியன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon