சுடச் சுடச் செய்திகள்

இந்து அறக்கட்டளை வாரிய உறுப்பினர்களுக்கு உயரிய விருது

நாட்டிற்கும் சமூகத்தினருக்கும் பெருமளவில் பங்களித்து வருபவர்களை அங்கீகரிக்கும் உயரிய விருதாக தேசிய தின விருது அமைகிறது.

இவ்வாண்டு வெவ்வேறு பிரிவுகளிலிருந்து கிட்டத்தட்ட 5,470 பேர் இவ்விருதைப் பெற்று கெளரவிக்கப்பட்டனர். அந்த வரிசையில் பொதுச் சேவை பதக்கமும் நீண்டகால சேவை பதக்கமும் இணைப் பேராசிரியர் நா.கணபதிக்கு வழங்கப்பட்டது.

இந்து அறக்கட்டளை வாரியத்தின்கீழ் செயல்படும் ஆ‌ஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லத்தின் தலைவராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.

2000ஆம் ஆண்டிலிருந்து இந்து அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினராகவும் இணைப் பேராசிரியர் கணபதி சேவையாற்றி வருகிறார். 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்து ஆலோசனை மன்றத்தில் உறுப்பினராக சேவையாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பணியாற்றும் இவர், குற்றவியல் தொடர்பான ஆராய்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார்.

முன்னாள் குற்றவாளிகள் சமூகத்தில் இணையும்போது சந்திக்கக்கூடிய சவால்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் இவர், ஆ‌ஷ்ரம் இல்லத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து இல்லவாசிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, ‘பேக் டு ஸ்கூல்’ திட்டம்வழி, இல்லவாசிகளின் பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்ப்படுத்த புத்தகங்கள், பள்ளி காலணிகள் வாங்க பற்றுச்சீட்டுகள் அவரவர் குடும்பத்திற்கு வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் 50 பிள்ளைகள் இத்திட்டத்தின்வழி பயனடைகின்றனர்.

தேசிய தின விருது கிடைத்தது குறித்து கருத்துரைத்த இணைப் பேராசிரியர் கணபதி, “இந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. பிறர் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன்.

“பொதுச் சேவை என்பது ஒரு தனிநபர் தனித்து செய்யக்கூடிய தொண்டு அல்ல. சமூகமாக சேர்ந்து செயல்பட்டால் ஒருவருக்கொருவர் ஊக்கமளித்து சமுதாயத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தலாம்,” என்றார்.

தமது தந்தை திரு நாராயணன் தமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்கியதாகவும் சமூகத்திற்கு தம்மால் ஆன உதவியைப் புரிய முன்வர வேண்டும் என்ற எண்ணத்தை தமக்குள் விதைத்த பெற்றோருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கணபதி சொன்னார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் மற்றோர் உறுப்பினரான சீ.லட்சுமணனுக்கும் இவ்வாண்டின் தேசிய தின விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவரான அவர், இவ்வாண்டின் பொதுச் சேவை நட்சத்திர (பார்) பதக்கத்தைப் பெற்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon