பரிதவிக்கவிட்ட பயணத்துறை

கொவிட்-19 கிருமித்தொற்று பரவல் எல்லாத் துறைகளையும் பாதித்துள்ளது. ஆனால், வேறு எந்தத் துறையையும்விட சுற்றுலாத்துறை பேரடி வாங்கியுள்ளது. பயணசேவை நிறுவனங்கள், ஹோட்டல்கள், சுற்றுலாத் தளங்கள், கடைத்தொகுதிகள், சுற்றுப்பயண வழிகாட்டிகள், நாணய மாற்றுத் தொழில் புரிவோர் என சுற்றுலாத் துறையை நம்பி பல தொழில்கள் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றன.

தற்போது பயணத்துறை நிலைகுலைந்துபோய்விட்டதால் இத்துறையை நம்பி இருந்தவர்கள் பல மாத கால வருமான இழப்பினால் பரிதவித்து நிற்கிறார்கள். என்ன செய்வது, எப்படி வாழ்க்கையை நடத்துவது என்றே தெரியவில்லை என்று பயணத்துறையைச் சேர்ந்த பலரும் வேதனைப்படுகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்கம் அளிக்கும் உறுதுணையும் சென்ற வாரம் அறிவித்துள்ள ஆதரவும் ஓரளவு நம்பிக்கை அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இர்ஷாத் முஹம்மது எஸ்.வெங்கடே‌ஷ்வரன்

இந்தியாவிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளிடம் பிரபலமாகத் திகழும் பயண நிறுவனங்களில் ஒன்றான ஜோஸ்கோ பயண நிறுவனம், இவ்வாண்டின் தொடக்கம் வரை ஆண்டுக்கு கிட்டத்தட்ட 40,000 சுற்றுபயணிகளுக்குச் சேவை வழங்கி வந்தது.

கிட்சனர் ரோட்டில் உள்ள அதன் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 400 வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் சுற்றுலாக்களை ஒரே நாளில் அந்நிறுவனத்தின் 30 ஊழியர்கள் நிர்வகிப்பார்கள்.

செந்தோசா தீவு, சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் போன்ற உள்ளூர் சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வதில் நீண்ட கால அனுபவத்தைப் பெற்றிருந்த ஜோஸ்கோ நிறுவனம், உள்நாட்டு சுற்றுப்பயணத்தை நம்பியே இருந்தது.

கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளால் சுற்றுப் பயணிகளின் வருகை இல்லாமல் தற்போது அலுவலகம் செயலிழந்து உள்ளது.

வர்த்தகம் முற்றிலும் முடங்கி விட்டாலும் மீட்சி பெறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் கடந்த 28 ஆண்டுகளாக ஜோஸ்கோ பயண நிறுவனத்தை நடத்தி வரும் அதன் நிர்வாக இயக்குநர் 80 வயது திரு. நாகை தங்கராசு.

“உலகமே எதிர்நோக்கும் நெருக்கடிநிலை இது. ஆனால், நிலைமை இப்படியே இருந்து விடப் போவதில்லை. இந்த துறையில் சிறந்து விளங்குபவர்கள் நாம். அதனால் தொழிலை நிறுத்தி விடக்கூடாது,” என்ற திரு தங்கராசு பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் தமது தொழிலைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் என்று கிட்டத்தட்ட 30 ஊழியர்களைக் கொண்ட அவரின் நிறுவனத்தில் தற்போது நான்கு சிங்கப்பூரர்கள் மட்டும் அன்றாடப் பணிகளைக் கவனித்து வருகிறார்கள்.

மற்றவர்கள் தற்காலிகமாக மாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் அல்லது விடுப்பில் உள்ளனர்.

13 சுற்றுலா பேருந்துகளில் ஐந்து பேருந்துகளை மட்டுமே வைத்திருப்பதாக திரு தங்கராசு குறிப்பிட்டார்.

“மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூர் அரசாங்கம் அதிகமான உதவிகளைச் செய்கிறது. அதனால் வர்த்தகம் செயல்படாவிட்டாலும் ஓரளவு சமாளிக்க முடிகிறது,” என்று கூறினார் அவர்.

அனைத்துலக அளவில் மாற்று வழிகள் தேவை

கொரோனா கிருமித்தொற்று எளிதாக விலகிவிடாது என்றும் பயணத்துறை தொழிலுக்கான மாற்று வழிகளை அனைத்துலக அளவில் கொண்டு வந்தால்தான் இத்துறை மீட்சி பெறும் என்றும் கூறினார் ‘சிராங்கூன் ஏர் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் 52 வயது திரு ஜாகிர் ஹுசேன்.

அரசாங்கத்தின் வேலை ஆதரவுத் திட்ட மானியங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள கணி சமாக உதவினாலும் அலுவலக வாடகை உட்பட ஏனைய செலவுகளும் அதிகமானதாக உள்ளது என்பதையும் சுட்டினார் ஜாகிர்.

“கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வர்த்தகம் சரியத் தொடங்கிவிட்டது. வழக்கமான டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால் வர்த்தகம் சென்ற டிசம்பர் மாதம் 60%தான் இருந்தது.

“கிருமி முறியடிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடப்பில் இருந்தபோது, பயணத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய மூன்று மாதகங்களுக்கு நெருக்கடி நீடிக்கும் என்று எதிர்பார்த்தோம். இவ்வளவு காலம் நெருக்கடியை சந்திப்போம் என நினைக்கவில்லை,” என்று கவலையுடன் கூறினார் திரு ஜாகிர்.

‘வந்தே பாரத்’ விமானத் திட்டத்தில் பயணம் செய்யும் சிலருக்கு உதவி வருவதால் அதிலிருந்து ஒரு சிறிய வருமானம் கிடைப்பதாக குறிப்பிட்டார் ஜாகிர்.

“அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் அல்லது செலவுக்குப் பணம் கொடுத்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை இழக்கவும் முடியாது,” என்றார் அவர்.

வர்த்தகம் அறவே இல்லாததால் சிலர் தங்களின் அலுவலகங்களை மூடி விட்டனர்.

உள்நாட்டு சுற்றுலாச் சேவைகள் மூலம் 70% வர்த்தகத்தை நடத்தி வந்த ‘ஸாரா டுவர்ஸ்’ நிறுவனம் கடந்த மாதம் அதன் ஐந்து அலுவலகங்களில் மூன்று அலுவலகங்களை முடிவிட்டது. பெலிலியோஸ் லேன், வர்டன் ரோடு ஆகிய இடங்களில் உள்ள இரு அலுவலகங்கள் மட்டும் செயல்படுகின்றன.

“எல்லா அலுவலகங்களையும் மூடியிருப்பேன். $300,000 மதிப்புள்ள சுற்றுலாத் தளங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் கைவசம் உள்ளன. அவற்றை விற்க முடியவில்லை. திருப்பிக் கொடுக்கவும் முடியவில்லை. அதை விற்க முடிந்தால் வேறு தொழிலுக்கு மாறலாம்.

“அந்த நுழைவுச்சீட்டுகள் தீரும் வரையில் வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. கட்டட உரிமையாளர்களும் வாடகையைக் குறைக்கவில்லை,” என்று தமது சிரமங்களைப் பகிர்ந்துகொண்டார் ஸாரா டுவர்ஸ் நிர்வாக இயக்குநர் 43 வயது திரு முகம்மது நைனா ரஜ்ஜாக்.

உள்ளூர் சுற்றுலா

ஊக்குவிப்பால் பலன் இல்லை

உள்ளூர் சுற்றுலாக்களை ஊக்குவிக்க, ‘சிங்கப்பூரை மீண்டும் கண்டறியும் பற்றுசீட்டு’களுக்கு அரசாங்கம் $320 மில்லியன் ஒதுக்கி உள்ளது. ஆனால், உள்ளூரில் வசிப்பவர்கள் அவர்களின் பயணங்களைச் சுயமாக ஏற்பாடு செய்துகொள்வார்கள். இதனால், பயண நிறுவனங்களுக்கு லாபம் இருக்காது என்ற குறிப்பிட்டார் திரு நைனா ரஜ்ஜாக்.

கைகொடுக்கும் தனி விமான சேவை ஏற்பாடு

இதற்கிடையே, இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரவும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்குச் செல்லவும் அதிகமான தேவை உள்ளதை அறிந்து, அதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளார் பல ஆண்டுகளாக பயண முகவர் நிறுவனமான ‘பேரடைஸ் டுவர்’சை நடத்திவரும் திரு சிராஜ்.

திருச்சிக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் 174 பேர் பயணம் செய்யக்கூடிய இண்டிகோ விமானத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

“இந்தச் சேவைக்கு வரவேற்பு சிறப்பாகவே உள்ளது. இந்திய அரசு ஏற்பாட்டில் ஒரு சில நாட்களில் மட்டுமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செயல்படுகிறது.

“அதில் இடம் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வேறு எந்தச் சேவையும் தற்போது இயங்காத நிலையில் தனி விமானத்தை ஏற்பாடு செய்து பயணச் சீட்டுகளையும் விற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது,” என்றார் திரு சிராஜ்.

கொவிட்-19 பாதிப்பால் பஃப்ளோ சாலையில் இருந்த தமது அலுவலகத்தை மூடிவிட்ட அவர், வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து தமது வர்த்தகத்தைத் தொடர்ந்து வருகிறார்.

“செலவைக் குறைப்பது ஒருபுறம் இருக்க வருமானத்தைத் தொடர்ந்து தேட வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

வேறு வேலைகளில் வாகன ஓட்டுநர்கள்

பயண நிறுவனங்களைச் சார்ந்தும் தனிப்பட்ட முறையிலும் செயல்பட்டு வந்த தனியார் சுற்றுப்பயண வேன், பஸ் ஓட்டுநர்களும் பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ளனர். நிறுவனத்தின் ஊழியர்களாகவோ சுய தொழில் புரிவோர்களாகவோ இருக்கும் அவர்கள் அரசாங்கத்தின் பல ஆதரவுத் திட்டங்களால் கொவிட்-19 கிருமிப் பரவல் நெருக்கடி கால பாதிப்பை ஓரளவு ஈடுகட்டியுள்ளனர்.

வேறு பணிகளைத் தேடிக்கொண்ட அவர்களில் சிலர், வெளிநாட்டு ஊழியர்களைத் தங்குமிடத்திற்கும் வேலையிடத்திற்கும் அழைத்துச் செல்லும் சேவையை வழங்கி வருகின்றனர்.

“பாதுகாப்பாக மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்ப தற்போது கட்டுமானத் தளங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் சேவைக்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் கொஞ்சம் வருமானம் வருகிறது,” என்றார் வாகன சேவை வழங்கும் திரு முஹம்மது ஆரிப்.

“என்னைப் போன்ற சக வேன் ஓட்டுநர்கள் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஏற்றிச்செல்லும் சேவையை முன்பிலிருந்து செய்து வந்தனர். அவர்களுக்கு வருமானம் தொடர்கிறது,” என்றார் அவர்.

“எதுவும் நிரந்தரம் அல்ல. சூழலுக்கு ஏற்ப வாய்ப்புகளும் மாறுகிறது. அதைத் தழுவவேண்டியதுதான் நமது சாமர்த்தியம்,” என்றார்.

தமக்குத் தெரிந்த பல வேன் ஓட்டுநர்கள் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படத் தொடங்கியதும் பாதுகாவலர் பணிக்கு மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“வாகனத்துக்கான மாதாந்தர கடன் தொகை மூன்று மாதங்களே தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு பின்னர், எப்படி அக்கட்டணத்தைக் கட்டுவது என்ற கேள்வி எழுகிறது. அதனாலேயெ சிலர் தங்களின் வாகனங்களை விற்றுள்ளனர்,” என்றார் அவர்.

சமாளிக்கும் ஹோட்டல் துறை

சுற்றுலாத் துறை முற்றுமாக செயல்படாமல் போனநிலையில், ஹோட்டல்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் சற்று சமாளிக்க தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் உதவியுள்ளன.

அத்துடன், மலேசியா - சிங்கப்பூர் எல்லை மூடப்பட்டதால் அன்றாடம் மலேசியாவுக்குப் பயணம் செய்து வந்த கிட்டத்தட்ட 100,000க்கும் அதிகமான மலேசியர்கள் இங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவர்களில் பலர் தற்போது இங்குள்ள ஹோட்டல்களில் தங்கி உள்ளனர்.

குறிப்பாக லிட்டில் இந்தியாவில் இயங்கும் பல ஹோட்டல்கள் தற்போது மலேசியர்களுக்கான தங்கு விடுதிகளாகச் செயல்படுகின்றன.

“வருமானம் குறைவு என்றாலும் இடம் காலி இல்லாமல் எல்லாருக்கும் வேலை இருக்கும் அளவிற்காவது வருமானம் வருவதை பெரும் பேராக எண்ணவேண்டியுள்ளது,” என்றார் லிட்டில் இந்தியாவில் இயங்கும் ஹோட்டல் ஒன்றின் மேலாளர் திரு ஜுபைர்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து திரும்புவோர் தனிமைப்படுத்தப் படுவதற்கும் ஹோட்டல்கள் பயன்படுகின்றன.

மேலும், கிருமிப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக வெளிநாட்டு ஊழியர்கள் நெருக்கமாக தங்குவது தடுக்கப்பட்டபோது அவர்களில் சிலர் ஹோட்டல்களில் தங்கினர்.

“சிரம காலமும் சிலவேளைகளில் உதவும் என்பதுபோல, இத்தகைய நெருக்கடிகள் எங்களது தொழில் செயல்பட உதவியது,” என்றார் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திரு டியோ ஹாரிஸ், 35.

“இத்தகைய நடவடிக்கைகள் தொழில் ஓரளவு தாக்குப்பிடிக்க உதவினாலும் வருமானம் ஈட்ட பெரிதாக உதவவில்லை. சுற்றுப்பயணிகள் வரவு இல்லாமல் இத்துறை பெரும் வருமான இழப்பை எதிர்கொண்டுள்ளது,” என்றார் அவர்.

ஹோட்டல் நடத்தும் பலரும் தங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொண்டுள்ளனர். இதில் அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள் கைகொடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சுற்றுலாப் பயணிகளை பெருமளவு நம்பி இருக்கும் சிங்கப்பூர், பொருளியல் மீட்சியைக் காணவும் பழைய துடிப்பைப் பெறவும் சுற்றுலாத் துறை மீண்டு எழ வேண்டும். பழைய நிலைக்கு உடனடியாகத் திரும்ப முடியாவிட்டாலும் வேறு வழிகளில் பயணத்துறையை ஊக்குவிக்க அரசாங்கங்கள் விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.

விரைவில் நிலைமை மாறும். சிங்கப்பூரின் பொருளியல் மேம்பட்டு, தங்கள் வாழ்வாதாரமும் மேம்படும் என்ற நம்பிக்கையோடு பயணத்துறைச் சார்ந்தவர்கள் காத்திருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!