சுடச் சுடச் செய்திகள்

புற்றுநோய்க்கு எதிரான நிதிதிரட்டு ஓட்டம்: கைகோத்த உள்ளூர் இந்தியக் கலைஞர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இருபது சிங்கப்பூர் இந்தியக் கலைஞர்கள் கைகோத்துள்ளனர்.

இவ்வாண்டு 12வது முறையாக நடைபெறும் சிங்டெல்-சிங்கப்பூர் புற்றுநோய்க் கழகத்தின் ‘ரேஸ் அகைன்ஸ்ட் கேன்சர்’ எனும் புற்றுநோய்க்கு எதிரான ஓட்டத்தில் அவர்கள் கலந்துகொள்கின்றனர்.

‘எம்பையர் ஆர்டிஸ்ட்’ எனும் உள்ளூர் இந்தியக் கலைஞர் நிர்வாக நிறுவனத்தைச் சேர்ந்த இந்த 20 பேரும் நெட்டோட்டத்தில் பங்குபெற்று ஒரே அணியாக நிதி திரட்டுகின்றனர்.

விக்னேஸ்வரி வடிவழகன், சுதா‌ஷினி, ஏடிகே, சந்துரு, ஜமுனா ராணி, கார்த்திகேயன் லோகன், ஹிமானி, குட்டி ஜி, லாவணியா, மஹாலக்‌ஷ்மி, மார்கஸ் ஏ.சி., நரேன், நிஷாலனி, நித்தியா ராவ், ஹம்சப்பிரியா ராவ், பவித்ரா, ராசாத்தி, சசிகுமார், சண்முகபிரகாஷ், சுந்தர் ஆகியோர் அந்த அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்களில் 5 கிலோமீட்டர் (கி.மீ.), 10 கி.மீ., 21 கி.மீ., அல்லது 42 கி.மீ. பிரிவு ஓட்டங்களில் பங்குபெற அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

அவர்களுடன் சேர்ந்து அந்த ஓட்டங்களில் பங்குபெறுவதன் மூலமாக சிங்கப்பூர் புற்றுநோய்க் கழகத்திற்கு நிதி திரட்டலாம்.

கொவிட்-19 கிருமித்தொற்று அபாயத்தைக் கருத்தில்கொண்டு இவ்வாண்டிற்கான ஓட்ட நிகழ்ச்சி சற்று மாறுபட்டுள்ளதாக சிங்கப்பூர் புற்றுநோய்க் கழகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வண்ணம் அனைவரும் கூடி ஓட்டத்தில் பங்குபெறாமல் ஒருவர் தமது வசதிக்கேற்ப தீவின் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த ஓட்டங்களில் கலந்துகொள்ளலாம்.

இவ்வாண்டு ஓட்டத்தின்மூலம் மொத்தம் $800,000 நிதியைத் திரட்டுவது ஏற்பாட்டாளர்களின் நோக்கம்.

“இந்தியக் கலைஞர்களாகிய நாங்கள் ஒன்றுசேர்ந்து இந்தியச் சமூகத்தின் சார்பாக சில ஆயிரம் வெள்ளி நிதியைத் திரட்டி சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கத்திற்கு வழங்க விரும்புகிறோம்,” என்று கூறினார் இந்தியக் கலைஞர் குழுவை ஒருங்கிணைத்து இந்த முயற்சியில் இறங்கியுள்ள பிரபல உள்ளூர் கலைஞர் நரேன் சுப்ரமணியம்.

நேற்றைய நிலவரப்படி அவர்கள் $1,781 தொகையை திரட்டி இருக்கின்றனர்.

சென்ற ஆண்டு முதன்முறையாகப் புற்றுநோய்க்கு எதிரான ஓட்டத்தில் கலந்துகொண்ட திரு நரேன், இவ்வாண்டு தம்முடன் ஓர் அணியையே திரட்டி களம் காண்கிறார்.

“நான் இதற்கான முயற்சியில் இறங்கியதும் சக கலைஞர்களும் முன்வந்து தாங்களும் பங்குபெற விரும்புவதாகக் கூறினர். கலைஞர்களாக நாங்கள் ஒன்றுசேர்ந்து புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடை கிறோம்,” என்றார் சிங்கப்பூர் புற்றுநோய்க் கழகத்தின் நல்லெண்ணத் தூதரான திரு நரேன்.

“இந்தியச் சமூகத்தினரிடையே புற்றுநோயால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போர் நம் சமூகத்தில் குறைவு. பலரும் அதைப் பற்றி பேசவோ அறிந்துகொள்ளவோ பயப்படுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறேன்,” என்றார் இவர்.

சிங்கப்பூர் புற்றுநோய்ப் பதிவேட்டின்படி, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தில் ஆண்களைவிட பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்களில் ஆக அதிகமானோர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆண்கள் மத்தியில் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் அதிகளவில் பாதித்துள்ளது. ‘புரோஸ்டேட்’ மற்றும் நுரையீரல் புற்றுநோயும் ஆண்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

1968ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரையில் 100,000 இந்தியர்களுக்கு 139 பேர் என்ற விகிதத்தில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. ஆனால், 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 167ஆக உயர்ந்துவிட்டதைத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்த மெய்நிகர் ஒட்டத்தில் பங்குபெற விரும்புபவர்கள் அடுத்த மாதம் 18ஆம் தேதிக்குள் http://raceagainstcancer.org.sg எனும் இணையத்தளம் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.

புத்தாக்கமிக்க ஓட்டப் பாதை, சிறப்பான உடை, விசுவாசமிக்க பங்கேற்பாளர், அதிக நிதி திரட்டியவர், ஆக நீண்ட தொலைவைக் கடந்தவர் போன்ற பரிசுகளை வெல்லும் வாய்ப்பும் இந்த ஓட்டத்தில் பங்குபெறுபவர்களுக்குக் காத்திருக்கிறது.

ஓட்டத்தில் பங்குபெறாமலும் https://www.raceagainstcancer.org.sg/team!G20200720HE என்ற இணையப்பக்கம் மூலம் பொதுமக்கள் நிதி ஆதரவை இந்த அணியின் சார்பாக வழங்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon