திறன்பேசியில் தயாரான முழுநீள உள்ளூர் தமிழ்த் திரைப்படம்

திரைப்படங்களைத் தயாரிக்க பெரிய கேமராக்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவை என்ற காலம் மலையேறிவிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சியைத் தன்வசப்படுத்தி நம் கைகளில் இருக்கும் திறன்பேசியை வைத்தே செய்துவிடலாம் என்று காட்டியுள்ளனர் விரைவில் வெளியீடு காணவிருக்கும் ‘அகண்டன்’ திரைப்படக் குழுவினர்.

தமிழகத்தின் ‘நம்பிராஜன் இண்டர்நே‌‌ஷனல் சினிமாஸ்’ நிறுவனமும் சிங்கப்பூரின் ‘சிங்காவூட் புரொடக்‌‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி கடந்த வெள்ளிக்கிழமை வெளியீடு கண்டது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படுத்திய தடைகளையும் கடந்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய மூன்று நாடுகளிலும் படப்பிடிப்பை முடித்து திரைப்படத்தின் திருத்தப்பணிகளைச் செய்துவருகின்றனர் குழுவினர்.

கிட்டத்தட்ட 110 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம், முழுக்க முழுக்க திறன்பேசியிலேயே எடுக்கப்பட்ட முதல் முழுநீள தமிழ்த் திரைப்படம் எனக் கருதலாம்.

அனைத்துலக அளவில் பல விருதுகளைக் குவித்த ‘டு லெட்’ தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகனான சந்தோ‌ஷ் நம்பிராஜன், இந்த ‘அகண்டன்’ திரைப்படத்தின் இயக்கம், தயாரிப்பு, கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு ஆகிய வெவ்வேறு ‌தோற்றங்களில் பரிணமித்துள்ளார்.

“அதிக பணம் உள்ளவர்களும் திரைப்படத் துறையில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பவர்களுமே ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கமுடியும் என்ற போக்கை மாற்றி, திறமையும் புத்தாக்கச் சிந்தனையும் இருந்தாலே அது சாத்தியம் என்பதை நாங்கள் நம்பினோம்,” என்றார் இணைத் தயாரிப்பாளரான ‘சிங்காவூட் புரொடக்‌‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான திருமதி சரஸ்வதி லோகன். அவரது கணவர், ‘லோகன் எண்டர்பிரைசஸ்’ எனும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை சிங்கப்பூரில் நடத்தி வருகிறார். ‘ரெக்ஸ்’ சினிமாவில் திரைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் அவர்.

சிங்கப்பூரரான சரஸ்வதி, “அதீத திறமையும் ஆர்வமும் கொண்ட பல உள்ளூர்க் கலைஞர்கள் இங்கு உள்ளனர். அனைத்துலக அரங்கில் அவர்கள் மிளிர இந்தத் திரைப்படம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்கும் என நம்புகிறோம். ‘ஐஃபோன் 11 புரோ மேக்ஸ்’ திறன்பேசியிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டது. நல்ல கதையும் குறிப்பிடத்தக்க திறனும் நல்ல திறன்பேசியுமே திரைப்படம் உருவாக போதுமானவை,” என்றார்.

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் ‘அகண்டன்’ திரைப்படத்தில் 14 புதுமுகங்கள் உள்ளனர். அவர்களில் 12 பேர் சிங்கப்பூரர்கள்.

கிரு‌ஷ்ணா, ஆ.கார்த்திக், ஜி.இளங்கோவன், முகம்மது அலி, கௌராங்கி சோப்ரா, சுதா ஒ’கொன்னல், ‌‌‌ஆஷா ஒ’கொன்னல், சாவித்திரி, சரஸ்வதி, லோகநாதன், ராமன் நிர்மல், ராஜேந்திரன் நீதிபாண்டி, நபிலா பேகம், ‌ஷ்ரஸ்டி ஒமர், யமின் டேனியல், மெலிசா வாங், சந்தோ‌ஷ் நம்பிராஜன் ஆகியோர் சிங்கப்பூர் நடிகர்களாவர்.

அத்துடன் ஒளிப்பதிவாளர்களாக இரண்டு சிங்கப்பூரர்கள் பயிற்சி பெற்றனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பல பிரபல இயக்குநர்களுடன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள சந்தோ‌ஷ், அவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் நட்சத்திரம் பிரேம்குமார் எனும் 33 வயது சிங்கப்பூரர். மென்பொருள் பொறியாளரான அவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அதன் தமிழ் இலக்கிய மன்றம் மூலம் காணொளிகள், இசைக் காட்சி உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார்.

“நான் முழுநீளத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இதுபோன்ற முயற்சியால் என்னைப் போன்ற சிங்கப்பூரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. திறன்களை வளர்க்க நல்ல தளமாகவும் அமைந்துள்ளது,” என்றார் பிரேம்குமார்.

இதே திரைப்படக் குழுவின் கைவண்ணத்தில் அடுத்த தமிழ்த் திரைப்படம் உருவாகி வருகிறது. அதில் அனைத்து காட்சிகளுமே சிங்கப்பூரில் எடுக்கப்படுகின்றன. அந்தத் திரைப்படத்துக்கு நட்சத்திரம் பிரேம்குமார் ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

“சாதாரணமாக ஒரு காட்சியை கேமராவில் பதிவுசெய்வதில் இருந்து பல படிகள் தாண்டியது ஒளிப்பதிவாளரின் பணி. ஒரு படத்திற்கு 50 முதல் 60 காட்சிகள் வரும். வாரயிறுதிகளிலும் வார நாட்களின் மாலை நேரங்களிலும் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். நல்ல அனுபவமாக இருக்கிறது,” என்று உற்சாகத்துடன் கூறினார் பிரேம்குமார்.

தமிழுக்கும் தமிழருக்கும் முக்கியத்துவம் தரும் சிங்கப்பூரில் இன்னும் தமிழ் சினிமா பெரிய அளவில் வளரவில்லை என்றார் திரு சந்தோ‌ஷ் நம்பிராஜன்.

“எழுத்து, ஓவியம் போல திரைப்படமும் ஒரு நாட்டின் அடையாளம். நாட்டின் வாழ்வியலும் சமூகத்தின் செய்திகளும் திரைப்படங்கள் மூலம் வெளிவரும். உள்ளூரில் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் ஆதரவும் உள்ளது,” என்று கூறினார் சந்தோ‌ஷ்.

தென்கிழக்காசியாவில் சினிமா மையமாக சிங்கப்பூர் அமையலாம் என்று கூறிய அவர், இதுபோன்ற முயற்சிகள் அதிகமாக இருந்தால் சிங்கப்பூரிலுள்ள கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட திறனாளர்களுக்குப் பல நல்ல வாய்ப்புகள் உள்ளன என்றார்.

நேற்று முன்தினம் வெளியீடு கண்ட ‘அகண்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை https://youtu.be/8kw-aYg8BN4 எனும் இணைப்பில் காணலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!