‘இதுவும் கடந்து போகும்’

சிறுவயது மகளுடன் தடைகாப்பு ஆணையை நிறைவேற்றிய ஒரு தந்தையின் அனுபவம்

சிவகுமார்

சில நாள்கள் ஒற்றை இலக்­கத்­தி­லும் ஒரு­சில நாள்­கள் அறவே தலை­காட்­டாத நிலை­யி­லும் இருந்த சிங்­கப்­பூ­ரின் கொவிட்-19 தொற்று நில­வ­ரம், இப்­படி நான்கு இலக்க அள­விற்கு மீண்­டும் உய­ரும் என்று நாம் ஒரு­போ­தும் எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்­டோம்.

இத்­த­கைய சூழ­லில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­போ­தும் என்­னைக் கிருமி தொற்­றா­த­போ­தும் ஏன் கிருமி தொற்­றி­யோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இல்­லா­த­போ­தும், வெளி­யில் செல்ல முடி­யா­மல் வீட்­டிற்­குள்­ளேயே நான் முடங்­கிக்­கி­டக்க நேரி­டும் எனச் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை.

தொடக்­கப்­பள்­ளி­யில் பயி­லும் என் மக­ளு­டன் பயி­லும் மாண­வர் ஒரு­வர்க்கு அண்­மை­யில் கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. நெருங்­கிய தொடர்­பில் இருந்த வகை­யில், அம்­மா­ண­வ­ரின் வகுப்­புத் தோழர்­கள் அனை­வ­ரும் தடை­காப்பு ஆணை­யின்­கீழ் பத்து நாள்­கள் தனித்­தி­ருக்க வேண்­டும் என்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அதன்­படி, என் மகளும் தன்னை வீட்­டின் ஓர் அறை­யில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­ய­தா­கி­விட்­டது. சிறு­வ­ய­தி­னள் என்­ப­தால் நான் அவ­ளைக் கவ­னித்­துக்­கொள்­ப­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்­சி­டம் இருந்து வாய்­மொழி உத்­த­ரவு கிடைக்­கப் பெற்­றேன். அதா­வது, கிட்­டத்­தட்ட எனக்­கும் தடை­காப்பு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­ட­து­போ­லத்­தான்!

நான் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தால் கட்­டாய விடுப்­பில் இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

அறை எனும் சிறை

அத­னை­ய­டுத்து, நானும் என் மகளும் கடந்த பத்து நாள்­க­ளாக ஒரே அறை­யில் இருக்க வேண்­டி­ய­தா­கிப்­போ­னது. அவ­சி­ய­மா­னால் ஒழிய, அறை­யை­விட்டு வெளியே செல்­லக்­கூ­டாது. அப்­ப­டிச் செய்ய நேர்ந்­தால், முகக்­க­வ­சம் அணிந்து வெளியே சென்று, விரை­வில் வேலையை முடித்­து அறைக்­குத் திரும்­பி­விட வேண்­டும்.

பெரி­ய­வர்­க­ளாக இருந்­தால் பிரச்­சி­னை­யில்லை. குழந்தை என்­ப­தால் பத்து நாள்­கள் அவளை எப்­படி அறைக்­குள்­ளேயே இருக்­கச் செய்­வது என்­பதை நினைத்து, முத­லில் மலைப்­பா­கத்­தான் இருந்­தது.

தொடக்­கத்­தில் ஓரிரு நாள்­கள், அவை­யும் வார­யி­றுதி நாள்­க­ளா­கிப் போன­தால், நேரத்­தைக் கடத்­து­வது அவ­ளுக்­குச் சிர­ம­மா­கவே இருந்­தது.

போதாக்­கு­றைக்கு பாலர் பள்­ளி­யில் பயி­லும் இளை­ய­வ­னும் இப்­போது வீட்­டி­லேயே இருப்­ப­தால், இரு­வ­ரும் ஒன்­றாய்ச் சேர்ந்து விளை­யாடி, பொழு­தைக் கழிக்க முடி­ய­வில்­லையே என்ற ஏக்­க­மும் கவ­லை­யும் அவர்­க­ளின் முகங்­களில் அப்­பட்­ட­மாய்த் தெரிந்­தன.

என் மனைவி வேலைக்­குச் செல்­ப­வர். அத­னால், வார நாள்­களில் என் மனைவி வேலைக்­குச் சென்­ற­பின் எப்­ப­டிப் பிள்­ளை­க­ளைச் சமா­ளிக்­கப் போகி­றோமோ என்ற கவலை முத­லில் இருந்­தது.

கைகொடுத்த அட்டவணை

இந்­நி­லை­யில், என் மக­ளுக்­குச் சலிப்பு ஏற்­பட்­டு­வி­டா­மல் இருக்­க­வும் என் கவ­லை­யைப் போக்­கும்­வி­த­மா­க­வும் என் மனைவி அரு­மை­யா­ன­தோர் ஏற்­பாட்­டைச் செய்­தார்.

நாள்­தோ­றும் இன்ன பணி­களை இன்ன நேரத்­தில் செய்ய வேண்­டும் என்று நேர அட்­ட­வணை போட்­டுக்­கொ­டுத்­தார். என் மக­ளுக்­கும் அது பிடித்­துப்­போ­னது.

இருப்­பி­னும், நடிகர் வடி­வேலு கூறும் வச­னத்­தைப்­போல, 'இந்­தக் கோட்­டைத் தாண்டி நீயும் போகக்­கூ­டாது, அவ­னும் வரக்­கூ­டாது' என்று பிள்­ளை­கள் இரு­வர்க்­கும் அவ்­வப்­போது அறி­வு­றுத்தி, அவர்­கள் சேர்ந்து விளை­யா­டத் தொடங்கி­வி­டா­மல் கண்­கா­ணிக்க வேண்­டி­யி­ருந்­தது.

தடை­காப்பு தொடங்­கு­முன் அவ­ளுக்கு வச­தி­யாக அறை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­தோம். அறை­க­லன்­களை இடம் மாற்­றி­னோம். அவ­ளது ஆடை­கள், பாட­நூல்­கள், கதைப் புத்­த­கங்­கள், கைக்­க­ணினி உள்­ளிட்­டவை அந்த அறை­யி­லேயே இருக்­கும்­படி செய்து, அவள் அறை­யை­விட்டு வெளியே வரத் தேவை இல்­லா­த­படி பார்த்­துக்­கொண்­டோம்.

இந்­தக் கால­கட்­டத்­தில் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் வீட்­டில் இருந்­த­படி கற்பதால், கட்­டாய விடுப்­பில் இருந்­தா­லும் அவ­ளால் வகுப்­பு­களில் பங்­கேற்க முடிந்­தது.

பரிசோதனைகள் அவசியம்

தடை­காப்­பின் தொடக்­கத்­தி­லும் இறு­தி­யி­லும் 'பிசி­ஆர்' பரி­சோ­தனை, 14 நாள்­க­ளுக்கு 'ஏஆர்டி' பரி­சோ­தனை எடுக்க வேண்­டி­யுள்­ளது. மூக்­கின் உட்­ப­கு­தி­வரை நுழைத்து, பரி­சோ­தனை செய்­த­போது, அதைத் தாங்­கிக்­கொள்ள என் மகள் சிர­மப்­ப­டு­கி­றாள். 'இன்­னும் சில நாள்­கள்­தான், சற்­றுப் பொறுத்­துக்­கொள்' என்று ஆறு­தல் கூறியே, ஒரு­வ­ழி­யாக அதைச் செய்து வந்தேன்.

'பிசி­ஆர்' சோத­னை­க­ளி­லும் அன்­றாட 'ஏஆர்டி' சோத­னை­க­ளி­லும் 'தொற்று இல்லை' என்றே முடிவு வந்­தது. பத்து நாள்­கள் தடை­காப்­பும் முடிந்­து­விட்­ட­தால் சற்று நிம்­மதி பிறந்­துள்­ளது.

மெத்தனம் கூடாது

ஆயி­னும், இன்­னொ­ரு­முறை இதே­போல் தடை­காப்பு ஆணை பிறப்­பிக்­கப்­ப­டாது என்­பது உறுதி இல்லை என்­ப­தால் அர­சாங்­கத்­தின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு இணங்கி நடந்து, கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றோம். பிள்­ளை­க­ளி­ட­மும் அதனை அறி­வு­றுத்தி வரு­கி­றோம்.

'நமக்­கெல்­லாம் எது­வும் நேராது' என்று ஒரு­போ­தும் மெத்­த­ன­மாக இருக்­கக்­கூ­டாது என்­பதை இந்த அனு­ப­வம் எனக்கு உணர்த்­தி­யுள்­ளது. கட்­டுப்­பா­டு­களும் அறி­வு­றுத்­தல்­களும் பிறர்க்கு மட்­டு­மல்ல, நமக்­கும்­தான் என்­பதை உணர்ந்து நடந்­து­கொண்­டால் பெரும் பாதிப்­பைத் தவிர்த்­து­வி­ட­லாம்.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தத்­தில் முன்­னி­லை­யில் இருக்­கும் நாடு­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் விளங்­கி­வ­ரும் நிலை­யில், இனி படிப்­ப­டி­யாக கொரோனா பர­வல் குறைந்து, கட்­டுப்­பா­டு­கள் முழு­மை­யா­கத் தளர்த்­தப்­பட்டு, இயல்­பு­வாழ்க்கை திரும்­பும் நாளை எதிர்­பார்த்து நானும் காத்­தி­ருக்­கி­றேன்.

இன்று நாம் எத்­த­கைய சிர­மங்­களை எதிர்­கொண்­டா­லும், கட­மை­யைச் சரி­வ­ரச் செய்­தால், நாளைய பொழுது நன்­றா­கவே விடி­யும் என்­பது என் திட­மான நம்­பிக்கை.

இது­வும் கடந்து போகும்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!