சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியவர் ஓய்வுபெற்ற விமானி திரு சுரேஷ் மேனன். ஓய்வுபெற்ற பிறகு ஆதரவு தேவைப்படும் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார் அவர்.
சிங்கப்பூர் சிறுவர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் 1997ஆம் ஆண்டில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
சிறுவர் சங்கத்திற்காக நிதி திரட்டுவது, ஆண்டுக்கு இருமுறையாவது சிறுவர் நிகழ்ச்சிகள் அல்லது நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றில் அவரின் கவனம் இருந்தது.
சிறுவர்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிப் பயிற்சி நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பாவனை விமானச் சூழலில் அவர்களைப் பறக்கவிடச் செய்யும் அரிய அனுபவத்தை நிர்வாக உறுப்பினரான திரு சுரேஷ் ஏற்படுத்தித் தந்தார்.
மற்ற பங்காளிகளின் உதவியுடன் அமெரிக்க போர் கப்பலினுள் நுழைந்து பார்வையிடும் அனுபவத்தையும் அவர் ஏற்படுத்தித் தந்தார். இது சிறுவர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது.
கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகளால் சிறுவர் சங்கத்தின்கீழ் இயங்கும் சன்பீம் பிளேஸ் இல்லச் சிறாருக்கு வெளியே செல்லும் சுதந்திரம் பறிபோன உணர்வு வரலாம் என்று கூறிய திரு சுரேஷ், அவர்களுக்கு இயன்ற உதவியைச் சங்கம் புரிந்து வருகிறது என்றார்.
இந்த இல்லத்தில் தற்போது 42 சிறுவர்கள் உள்ளனர். பெரும்பாலும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்கு ஆளான பிள்ளைகள் இங்கு வசிக்கின்றனர்.
கட்டுப்பாடுகளின் அவசியத்தை சிறுவர்களிடையே சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி வரும் அதேவேளையில் சிறுவர்களின் மனநலனுக்காகவும் பாடுபடுகின்றனர்.
சிறுவர்களைக் குறிப்பிட்ட ஓர் எண்ணிக்கையில் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்கப்பூரை வலம்வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஒருமுறை விமானி ஒருவரிடம் பேச வேண்டும் என்று சிறுவர் ஒருவர் விரும்பினார். மெய்நிகர் தொடர்புவழி, அச்சிறுவனிடம் விமானி ஆவது எப்படி என்று தாம் பகிர்ந்துகொண்டதாக 67 வயது திரு சுரேஷ் நினைவுகூர்ந்தார்.
"இங்கிருக்கும் சிறுவர்கள் பிற்காலத்தில் தங்களின் குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் இணைய வேண்டும். அல்லது வளர்ப்புப் பெற்றோரால் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
"இவர்களுக்கான ஒரு வலுவான ஆதரவுக் கட்டமைப்பு இருக்க, அதில் ஒரு சிறிய பங்கினை என்னால் ஆற்ற முடிந்ததில் மனநிறைவு அடைகிறேன்," என்று கூறினார் திரு சுரேஷ்.
சிறுவர் சங்கத்தின் உயரிய 'ரூத் வோங்' தொண்டூழிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது 10 ஆண்டுகள் தலைசிறந்த தொண்டூழியப் பணிகள் ஆற்றியவர்களை கௌரவிக்க இவ்விருது வழங்கப்படுகிறது.
விருதை சங்கத்தின் புரவலரான அதிபர் திருவாட்டி ஹலிமா யாக்கோப்பிடமிருந்து திரு சுரேஷ் பெற்றுக்கொண்டார்.
செய்தி: ப. பாலசுப்பிரமணியம்