பிள்ளைகளுக்கு இளம்வயதில் கிடைக்கும் ஊக்கம் அவர்களின் எதிர்கால தன்னம்பிக்கைக்கு வித்தாக அமையும் என்று கூறினார் அண்மையில் இவ்வாண்டிற்கான தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியர் விருதினைப் பெற்ற தமிழாசிரியர் திருமதி சங்கீதா வேல்முருகன், 43.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழாசிரியராக பணியாற்றிவரும் இவர், பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். தாமான் ஜூரோங் புளோக் 352ல் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பள்ளியில் பணிபுரியும் திருமதி சங்கீதா, கற்றலை பிள்ளைகள் மகிழ்வுடன் எதிர்நோக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு புத்தாக்க நடவடிக்கைகளைக் கையாள்கிறார்.
கைப்பாவையை வைத்து பாடங்கள் எடுத்தல், உணவு வகைகளை உபயோகித்தல், கதை சொல்லுதல் போன்று பிள்ளைகளுக்கு சுவாரசியமூட்டும் வழிமுறைகளை இவர் மேற்கொள்கிறார்.
“பிள்ளைகளுக்கு தொட்டு உணர்தலும் சுயமாக ஆராய்தலும் கல்வியின் மீது அதிக நாட்டத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்திருக்கிறேன்.
“ஓர் ஆசிரியராக தனித்திராமல் அவர்களுடன் நண்பர்களைப் போல பழகுவது அவர்களை புரிந்து கொள்ள வழிவகுக்கும்” என்றும் இவர் கூறினார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தாயான இவர், “என் மொத்த வாழ்வும் பிள்ளைகளுடன்தான் கழிகிறது. காலையில் பள்ளிப் பிள்ளைகளுடன்; மற்ற நேரங்களில் வீட்டில் பிள்ளைகளுடன். அதனாலேயே மிகுந்த நிம்மதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறேன்,” என்றார்.
2015ஆம் ஆண்டிற்கான சிறப்புத் தேர்ச்சி விருதினையும் (Merit Award 2015) இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற விருதுகள் தனக்கு அதிக ஊக்கம் அளிப்பதாகவும் தொடர்ந்து பல மாணவர்களை உருவாக்க முனைவதாகவும் மகிழ்வுடன் கூறினார் சங்கீதா.
பொறுமையான அணுகுமுறையும் பிள்ளைகள் பற்றிய உள்ளார்ந்த புரிதலுமே அவர்களின் கற்றல் அனுபவத்தை அழகாக்குகிறது என்கிறார் இவ்வாண்டிற்கான தலைசிறந்த பாலர்பள்ளி தாய்மொழி ஆசிரியர் விருதினைப் பெற்ற மற்றொரு தமிழாசிரியரான திருமதி கவிதா ராமச்சந்திரன், 40.
தொடர்புடைய செய்திகள்
12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியப் பணியில் இருந்துவரும் இவர், முதல் 8 ஆண்டுகாலம் ஆங்கில ஆசிரியராக இருந்தார். அதன்பின் தாம் பணியாற்றிய பள்ளி ஒன்றின் தலைமையாசிரியரின் ஊக்கத்தினாலும் இளம்வயதுதொட்டே தமிழ்மொழி மீதிருந்த நாட்டத்தினாலும் தமிழாசிரியரானார்.
மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பர். தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கோலாட்டம், நொண்டியாட்டம் போன்றவற்றை பூங்கா போன்ற பொது இடங்களில் மாணவர்களுடன் சேர்ந்து செய்வதுண்டு என்று கூறினார் திருமதி கவிதா.
இதுபோல் தமிழ்மொழி மற்றும் தமிழர் மரபுடைமை சார்ந்தவைகளை மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில் அறிமுகப்படுத்துவதில் கூடுதல் அக்கறை காட்டுவதாகக் கூறிய இவர், தற்போது பாய லேபார் புளோக் 125ல் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பள்ளியில் பணிபுரிகிறார்.
“தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் பாலர் பள்ளி ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. தமிழ் மீதான ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்ப்பதிலும் வாழ்நாளுக்கான மொழிப்பற்றையும் உருவாக்குவதில் அடித்தளம் அமைத்துக்கொடுக்கும் உன்னதமான பணி அவர்களுக்கானது,” என்று கூறினார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார்.

