சிங்கப்பூரில் இன்று நண்பகல் (பிப்ரவரி 26ஆம் தேதி) நிலவரப்படி, புதிதாக 13 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சமூகத்தில் அல்லது வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிய கிருமித்தொற்று இல்லை.
சென்ற வியாழக்கிழமை அன்று ஈசூனில் உள்ள 'பெர்ரிஸ் வேர்ல்ட் ஆஃப் லேர்னிங்ஸ் கூல்' எனும் சீனமொழி பயிற்றுவிப்பு நிலையத்தில் வேலை பார்த்த 27 வயது ஆசிரியர் பாதிக்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை வேலை செய்த பிறகு அவருக்கு சளி ஏற்பட்டது.
மறுநாள் பொது மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு கொவிட்-19 கிருமி தொற்றி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே அவர் பணியாற்றிய நிலையம் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
வியாழக்கிழமை சமூகத்தில் ஏற்பட்ட மற்றொரு கிருமித்தொற்று சம்பவத்தில் 33 வயது மலேசியர் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு இருமுறை ஃபைசர்-பயயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டப் பிறகு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சில வாரங்கள் ஆகலாம் என்பதால் அதற்குள்ளாக அவர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.