கொவிட்-19: சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை 90 ஆனது; மேலும் இருவர் வீடு திரும்பினர்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக இன்று (பிப்ரவரி 24) சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

இங்கு மேலும் ஒருவருக்கு புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆகியுள்ளது.

அவர்களில் 53 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர் 75 வயதான சிங்கப்பூர் குடிமகள். அவர் ‘தி லைஃப் சர்ச் அண்ட் மிஷன்ஸ் சிங்கப்பூர்’ தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றில் தொடர்புடையவர். அந்த தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் தொடர்புடைய  7வது நபர் இவர். 

இவருக்கு பிப்ரவரி 9ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்டதையடுத்து தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார்.

அதே மருத்துவரை பிப்ரவரி 17ஆம் தேதி மீண்டும் பார்த்து சிகிச்சை பெற்ற அவர், நேற்றும் அதே மருத்துவரிடம் சென்றார். பின்னர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை வாகனம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.

அதனையடுத்து நேற்று பிற்பகலில் அவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் பெரும்பாலும் வீட்டில்தான் இருந்தார்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 89வது நபர் 41 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி. அவர் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என்பதை இன்று சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் தெரிவித்தது.

இன்று மதியம் வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2,842 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 1,986 பேர் தங்களது தடைகாப்பை நிறைவு செய்துவிட்டனர். தற்போது 856 பேர் தடைகாப்பில் உள்ளனர். 

மருத்துவமனையில் எஞ்சிய பெரும்பாலோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது. 7 பேர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

#சிங்கப்பூர் #கொரோனா #கொவிட்-19 #தமிழ்முரசு