கப்பலில் மேலும் 67 பேருக்கு கிருமித் தொற்று; பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆனது

ஜப்பானின் யோக்கஹாமா கரையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் 'கொவிட் -19' எனப்படும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  மேலும் 67 கூடியிருப்பதாக ஜப்பான் சுகாதார அமைச்சர் கட்சுனோபு காட்டோ இன்று (பிப்ரவரி 15) தெரிவித்தார்.

அவர்களில் கப்பலில் பணிபுரியும் இந்திய ஊழியரும் ஒருவர். இவரையும் சேர்த்து, கப்பலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. அந்தக் கப்பலில் 130க்கு மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

கடந்த ஒரு வாரத்துக்குள் கப்பலில் இருந்த 200க்கு மேற்பட்டோர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு நாட்டு அரசாங்கங்கள், கப்பலில் இருக்கும் தங்களது குடிமக்களைத் தாயகத்துக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்திய அரசும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டது.

கப்பலில் இருக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட, கிருமித்தொற்றினால் பாதிக்கப்படாதவர்களைக் கப்பலிலிருது வெளியில் கொண்டுவந்து தனிமைப்படுத்த ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல, வேறு உடல் நலப் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் சிலரும் கப்பலிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், கப்பலில் இருக்கும் இந்தியர்கள் யாரும் இந்தப் பிரிவில் இல்லை என்பதால், அவர்கள் யாரும் இத்தகைய காரணங்களுக்காக கப்பலில் இருந்து ஊருக்குள் வர அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, தங்களது குடிமக்களைத் தாயகத்துக்கு அழைத்து வர அமெரிக்கா விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அந்த விமானம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஜப்பானுக்குச் செல்லும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

கப்பலில் 3,711 பேர் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 700 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

பிப்ரவரி 19ஆம் தேதி வரை கப்பல் தனிமைப்படுத்தப்படும் என்று முன்பு கூறப்பட்டது. அனைவருக்கும் பரிசோதனைகள் முடிவுறாத நிலையில், அந்தக் காலகட்டம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

#தமிழ்முரசு #டைமண்ட் பிரின்சஸ் #இந்தியர் #அமெரிக்கா #கொரோனா
 

Loading...
Load next