மருத்துவப் பணியாளர்களையும் விட்டுவைக்காத 'கொவிட்-19'; சிங்கப்பூரிலும் ஒரு மருத்துவருக்கு பாதிப்பு

சீனாவில் 1,716 சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அதில் அறுவர் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவித்ததுள்ள் நிலையில்,  தாய்லாந்திலும் மருத்துவ ஊழியர் ஒருவருக்கு இந்த கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  அங்கு கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரிலும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதை சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. 61 வயது சிங்கப்பூரரான அவர், சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 59வது நபர்.

தற்போது தேசிய தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சைபெற்று வரும் அவர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இருமல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அதற்குப் பிறகு தாம் பணிக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்ட அவர், தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் டெங்கியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பரிசோதித்துப் பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், பின்னர் தனக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.

அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் சீனாவுக்கு கடந்த ஓராண்டாகச் செல்லவில்லை என்றும் அவரது மனைவி தெரிவித்தார்.

அவரது வீட்டில் இருக்கும் மற்ற அனைவரும் பரிசோதனைக்குச் சென்றதாகவும் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சமுதாயக் கடப்பாடு காரணமாக அனைவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக மருத்துவரின் மனைவி கூறினார். 

#தமிழ்முரசு #கொரோனா #மருத்துவ #சிங்கப்பூர் #தாய்லாந்து

Loading...
Load next