கப்பலில் கிருமி தொற்றிய 218 பேரில் இருவர் இந்தியர்; நம்பிக்கையுடன் இருக்கும் மதுரைக்காரர்

கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு காரணமாக ஜப்பானின் யோக்கஹாமா கரைக்குப் பக்கத்தில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் டையமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 44 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்தக் கப்பலில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 13) 218ஆக உயர்ந்துள்ளது.

அந்தக் கப்பலில் ஐந்து தமிழர்கள் உட்பட, 138 இந்தியப் பயணிகள், கப்பல் ஊழியர்கள் இருக்கின்றனர்.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் இருவர் கப்பலில் பணிபுரியும் இந்திய ஊழியர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

அந்தக் கப்பலில் பணிபுரியும் மதுரை மாவட்டம், நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன், பல்வேறு தகவல்களை, ‘வாட்ஸ்ஆப் வீடியோ’ மூலம் வெளியிட்டுள்ளார். 

அது, இந்திய அரசின் கவனத்திற்கும் சென்றது. தற்போது அவர், கப்பல் நிர்வாகம் நன்றாக கவனிப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் அனைவருக்கும் முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், வெப்பமானிகள் போன்றவை வழங்கப்பட்டிருப்பதாகவும் அடிக்கடி தண்ணீர் குடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் தோக்கியோ நகரில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகள், தம்மைக் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நிலவரம் குறித்து கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல, ஏற்பாடு செய்வதாக அவர்கள் உத்தரவாதம் அளித்ததாக திரு அன்பழகன் குறிப்பிட்டார்.

தேவை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க, தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறிய திரு அன்பழகன், இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவோம் என்று குறிப்பிட்டார்.

அந்தக் கப்பலில் பணிபுரியும் பினய் குமார் சர்க்கார் எனும் இந்திய ஊழியர், கப்பலின் கீழ்த்தளத்தில் ஊழியர்கள் அனைவரும் மிகவும் நெருக்கமாகப் பணிபுரிய வேண்டியிருப்பதாகவும் கிருமித் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் இரு தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் செய்தி வெளியிட்டு, இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு தங்களைத் தாயகத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறப்பட்டது. பயணிகள் அனைவரும் அவர்களது அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அந்தக் கப்பலில் இருக்கும் கிருமித் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட வயதானவர்களை கப்பலிலிருந்து இறங்க அனுமதிப்பதுடன், அரசாங்கம் ஏற்பாடு செய்யும் இடங்களில் தங்கவைக்க இருப்பதாக ஜப்பான் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கேட்டோ கூறினார். 

3,711 பேருடன் கடந்த மூன்றாம் தேதி ஜப்பானுக்குச் சென்ற கப்பல், கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இம்மாதம் 19ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
 

#தமிழ்முரசு #கொரோனா #ஜப்பான் சொகுசுக் கப்பல் #டைமண்ட் பிரின்சஸ்

Loading...
Load next