‘நிலைமை சீராக உள்ளது ஆனால் எதுவும் நடக்கலாம்’

ஜினிவா: கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்போரின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரிக்கவில்லை என்றும் கிருமி பரவுவது மெதுவடைந்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பில் தலைமை இயக்குநர் டாக்டர் தெட்ரோஸ் அதானோம் கேபிரேயேசுஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் நினைவூட்டினார். 

“தற்போது நிலைமை மோசமாகாமல் சீராக இருக்கிறது. ஆனால் எதுவும் நடக்கலாம்,” என்று ஜினிவாவில் நடைபெற்ற அறிவியல், புத்தாக்கக் கருத்தரங்கில் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கிருமியை எதிர்கொள்ள மருத்துவ ஆராய்ச்சிகள் செவ்வனே செயல்பட்டு வருவதை அவர் பாராட்டி வரவேற்றார். 

குறுகிய காலக்கட்டத்தில் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுடன் ஆக்கபூர்வமான பல திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியிருப்பதை அவர் சுட்டினார்.

இந்த வாரத் தொடக்கத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான உயர்தர மருத்துவக் குழு ஒன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதாக அவர் கூறினார். அந்தக் குழு அங்கு சென்றிருப்பதால் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாக டாக்டர் தேட்ரோஸ் கூறினார். 

முன்பைக்காட்டிலும் கடந்த இரண்டு வாரங்களில் சீனாவில் குறைவான கிருமித்தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

Loading...
Load next