செய்தித் துளிகள் - கொரோனோ தொற்று

சிங்கப்பூர் நுழைவு அனுமதி: நானூறு பேருக்கு அனுமதி மறுப்பு

சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டபின் சிங்கப்பூருக்குத் திரும்ப நுழைவு அனுமதி கேட்டு வேலை அனுமதிச்சீட்டு  ஊழியர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்களில் நாள்தோறும் கிட்டத்தட்ட 400 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 200 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப் படுகின்றன. கடந்த 9ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கான புள்ளிவிவரம் இவை.

விமானத்துறைக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படலாம்

கொரோனா கிருமி மிரட்டல் காரணமாக உலகம் முழுவதும் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு $6.9 பில்லியன் இழப்பு ஏற்படக்கூடும் என்று அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்துக் கழகம் கணக்கிட்டுள்ளது. கிருமித்தொற்று காரணமாக 70 விமான நிறுவனங்கள் சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தங்களது அனைத்துலகச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகவும் இதர 50 நிறுவனங்கள் சேவைகளைக் குறைத்துள்ளதாகவும் அந்த ஐநா அமைப்பு கூறியுள்ளது. 

பேராசிரியர் ஐரா லாங்கினி : மூவரில் இருவர் பாதிக்கப்படலாம்

உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் கொரொனா கிருமியால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆலோசகராக இருக்கும் பேராசிரியர் ஐரா லாங்கினி எச்சரித்துள்ளார். சீனாவில் அந்தக் கிருமி தொற்றும் வேகம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் அவர் இதனை மதிப்பிட்டுள்ளார். “பாதிக்கப்பட்டவர்களைத் தனித்து வைப்பதாலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப் படுத்துவதாலும் கிருமிப் பரவலைத் தடுத்துவிட முடியாது,” என்கிறார் அவர்.

‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் இருந்து 80 வயதுக்குமேற்பட்டவர்கள் விடுவிடுப்பு

ஜப்பானின் யோக்கொஹாமா துறைமுகத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் இருந்து உடல்நலம் குன்றிய அல்லது சன்னல் இல்லா அறைகளில்  அடைபட்டிருந்த 80 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அதில் இருந்து வெளியேற ஜப்பான் அரசு அனுமதித்துள்ளது. 

பிலிப்பீன்ஸ்: தைவானியருக்கு இனி தடையில்லை

தைவான் மக்கள் தனது நாட்டிற்குள் நுழைவதற்கு விதித்திருந்த தடை மீட்டுக் கொள்ளப்படும் என்று பிலிப்பீன்ஸ் அறிவித்துள்ளது. தடையை மீட்டுக்கொள்ளா விடில் பதில் நடவடிக்கை எடுப்போம் என்று தைவான் விடுத்த மிரட்டலுக்கு பிலிப்பீன்ஸ் பணிந்துள்ளது.

Loading...
Load next