பெருகும் கிருமித்தொற்று; பிரான்சில் முதல் 'கொவிட்-19' உயிரிழப்பு

'கொவிட்-19' எனப்படும் கொரோனா கிருமித்தொற்றால் மேலும்  2,641 பேர்  பாதிக்கப்பட்டிருப்பதாக இன்று  (பிப்ரவரி 15) சீனாவின் சுகாதரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, நேற்றைய நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்றால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66,492 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 கூடி 1,523 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாக தேசிய சுகாதார ஆணைய அதிகாரி லியாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிருமித்தொற்றால் நேற்று ஒரே நாளில் ஹுபெய்யில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 139. அம்மாகாணத்தின் வூஹானில் மட்டும் நேற்று 107 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் பல போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் வேளையில், பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. 

விடுமுறை முடிந்து தலைநகர் பெய்ஜிங்குக்குத் திரும்புவோர் வீடுகளில் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்று அங்கு பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

சீனாவுக்கு வெளியே, உலகின் 24  நாடுகளில் சுமார் 500 பெர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமித்தொற்றால் ஜப்பான், ஹாங்காங், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐரோப்பா இன்று  முதல் உயிரிழப்பைப் பதிவுசெய்துள்ளது. 

பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த வயதான சீனப் பெண்மணி ஒருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் ஏக்னஸ் புஸின் உறுதிப்படுத்தினார். வடக்கு பாரிசில் உள்ள பைச்சாட் மருத்துவமனையில் கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வந்தார்.

பிரான்சில் 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, எகிப்தில் வெளிநாட்டவர் ஒருவருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ள முதல் கிருமித்தொற்று சம்பவம்.

இந்த நூற்றாண்டில் உருவான, சுவாசப் பிரச்சினைகளை ஏற்பத்தும் கிருமிகளிலேயே, கொவிட்-19  மிக வேகமாகப் பரவுவதாகவும் அதனால் உயிரிழப்போரின் விகிதம் 2 விழுக்காடாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 

#தமிழ்முரசு #கொரோனா #France

Loading...
Load next