சீனாவில் குறைந்து வரும் கிருமித்தொற்று பரவல்; போக்கு தொடருமா?

சீனாவில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய (பிப்ரவரி 17) நிலவரப்படி 1,868. அதற்கு முந்தைய நாள் 98 பேர் உயிரிழந்ததாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இன்று குறிப்பிட்டது.

நேற்று அங்கு புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,886ஆக இருந்தது. சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,436 ஆனது.

நேற்று உயிரிழந்த சம்பவங்களில் பல வூஹானில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வூஹானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை நேற்று 72ஆகக் குறைந்தது. வூஹானில் மொத்தம் 1,381 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

வூஹானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,690 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. நேற்று அந்த எண்ணிக்கை 1,600ஆகக் குறைந்தது.

சீனாவின் மற்ற பகுதிகளிலும் புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் குறிப்பிட்ட சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், கிருமிப் பரவல் கட்டுக்குள் வருவதற்கான அறிகுறி இது என்றது. 

ஆனால், போக்குகளைக் கணிப்பதில் மிகுந்த கவனம் தேவை என்றும் புதிய குழுக்களிடையே கிருமித்தொற்று ஏற்பட்டால், இந்தப் போக்கு மாறும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ்  அதேனம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

 

#தமிழ்முரசு #சீனா #கொரோனா