உலக சுகாதார நிறுவனம்: பிற நாடுகளும் சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொவிட்-19 என்னும் கொரோனா கிருமித்தொற்று பரவலுக்கு எதிராக சிங்கப்பூர் முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் செயல்பாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. 

சிங்கப்பூரைப் பின்பற்றி மற்ற நாடுகளும் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுகொண்டது. 

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், சிங்கப்பூரின் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கை சந்தித்து கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்ததாகக் கூறினார்.

“ஒவ்வொரு கிருமித்தொற்றுச் சம்பவத்தையும் தனித்தனியாகப் பார்க்காமல் அதன் தொடர்புகளைத் தேடிக் கண்டுபிடித்து கிருமித் தொற்றைத் தடுத்து நிறுத்தும் சிங்கப்பூரின் நடவடிக்கைகள் எங்களை ஆச்சரியப்பட வைத்தது,” என்று கூறினார்.

பின்னர் மலேசிய சுகாதார அமைச்சரிடம் வெஸ்டர்டாம் உல்லாசக் கப்பல் பற்றி பேசியதாகக் கூறினார் திரு டெட்ரோஸ். அக்கப்பல் மலேசியாவை வந்தடைந்தபோது 83 வயது அமெரிக்க மூதாட்டிக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது தெரியவந்தது. பின்னர் அக்கப்பல் கம்போடியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டு பயணிகள் தரையிறக்கப்பட்டனர். அத்துடன் கொரோனா கிருமி பரவலைத் தடுக்க மலேசியா எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் மலேசிய அமைச்சரிடம் கேட்டு அறிந்ததாக அவர் கூறினார்.

கிருமிப் பரவலை  எதிர்கொள்ள நாடுகள் தயார்நிலையில் உள்ளதாக அவர் கூறினார். எந்த ஒரு நாடும் கொரோனா கிருமிப் பரவலுக்கு இலக்காக நேரிட்டால், நோயாளிக்கு சிகிச்சை வழங்குவது, சுகாதாரத் துறை ஊழியர்களைப் பாதுகாப்பது, கிருமி பரவலைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு நாடுகள் தயாராக உள்ளன என அவர் கூறினார்.

தனிப்பட்ட பாதுகாப்புச் சாதனங்கள் போன்றவற்றை இதுவரையிலும் 21 நாடுகளுக்கு உலக சுகாதார வாரியம் அனுப்பியுள்ளது. அது வரும் வாரங்களில் மேலும் 106 நாடுகளுக்கு தனிப்பட்ட பாதுகாப்புச் சாதனங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.

இந்நிலையில் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த சீனா சரியான உத்தியைக் கொண்டு போராடி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மைக்கல் ரயான் தெரிவித்தார்.

“கொரோனா கிருமி தொற்று சீனாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுதும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு நன்கு யோசித்து ஆதார அடிப்படையில் எடுக்கப்படும்  பொது சுகாதார நடவடிக்கைகளை  நாங்கள் காண விரும்புகிறோம். அத்துடன் இதில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்த சமநிலையைக் காண்பது சிலசமயங்களில் கடினமானது,” என்று திரு மைக்கல் ரயான் தெரிவித்தார். “இப்போதைய நிலையில் சீனாவில் எடுக்கப்பட்டிருக்கும் உத்திபூர்வமான அணுகுமுறை சரியான ஒன்றுதான். இதே போல்தான் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டிருக்கும் உத்திபூர்வ அணுகுமுறை.

“பல நாடுகளில் முனைப்புடன், நன்கு திட்டமிடப்பட்டு இந்தக் கிருமியை அடையாளம் கண்டு அதைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளை நாங்கள் காண்கிறோம். இனிவரும் காலங்களில் அனைத்து நாடுகளிலும் பொது சுகாதாரத்தில் இதுபோன்ற ஆதார அடிப்படையிலான அணுகுமுறை எடுப்பதை நாங்கள் காணவிரும்புகிறோம்,” என்றார் திரு ரயான்.