‘எம்எஸ் வெஸ்டர்டாம்’ கப்பலை விட்டு வெளியேறிய இறுதிப் பயணிகள்

கிட்டத்தட்ட 2300 பேருடன் கம்போடிய துறைமுகத்தில் நங்கூரமிட்ட ‘எம்எஸ் வெஸ்டர்டாம்’ உல்லாசக் கப்பலிலிருந்து கடைசியாக 233 பயணிகள் நேற்று வெளியேறியதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட கப்பல், ஐந்து நாடுகளில் நங்கூரமிடக் கேட்டுக்கொண்டும் மறுக்கப்பட்டதை அடுத்து கம்போடியா அதற்கு சம்மதித்தது. இதற்கிடையே அதிலிருந்து முதலில் வந்தவர்களில் ஓர் அமெரிக்க மாதுவுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதை மலேசியா உறுதிசெய்ததை அடுத்து பலரும் கம்போடியா எடுத்த முடிவைச் சாடினர்.

இதைத் தொடர்ந்து கடைசியாக கப்பலில் இருந்த பயணிகள் சோதனைகளுக்குப் பிறகு கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட நிலையில் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கம்போடியாவின் தலைநகரான நோம்பென்னில் ஓர் இரவு தங்கிவிட்டு இன்று அவர்கள் தங்களின் தாய்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று அந்நாட்டு பொதுப் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.