சொகுசுக் கப்பலில் சிங்கப்பூரர்கள் நலம்; இரு ஜப்பானியர் மரணம்

கொவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருக்கும் ஐந்து சிங்கப்பூரர்கள் இரு வாரங்களுக்குப் பிறகு நல்ல உடல்நிலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதே நேரம் அந்தக் கப்பலில் பயணம் செய்த இரு முதியவர்கள் மரணமடைந்துவிட்டதாக இன்று (பிப்ரவரி 20) ஜப்பானின் என்எச்கே தொலைக்காட்சி தெரிவித்தது. 

இம்மாதம் 11, 12 தேதிகளில் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்ட அவ்விருவரும் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் ஜப்பானைச் சேர்ந்த 80 வயதுடைய ஓர் ஆண், ஒரு பெண் என்று என்எச்கே கூறியது. 

மேலும் 29 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜப்பானிய அரசாங்கம் கூறியது.

பயணிகளிடம் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதன் காரணமாக இம்மாதம் 3ஆம் தேதி முதல் டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பல் ஜப்பான் கடலோரமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் 3,700 பேரில் சுமார் 600 பேருக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாயின. 

சீனாவுக்கு வெளியே ஆக அதிகமாக இந்தக் கப்பலின் பயணிகள்தான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருந்து 500 பயணிகள் வெளியேறத் தொடங்கினர்.

கிருமித் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட 100 பேர் தங்களது நாடுகளுக்குத் திரும்பத் தொடங்கியதாகவும் ஜப்பானிய சுகாதார அமைச்சு தெரி வித்தது.

இதற்கிடையே, கப்பல் பயணிகள் விவகாரத்தை ஜப்பானிய அரசு கையாண்ட விதம் குறித்து அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கொவிட்-19 தொற்றால் தென்கொரியாவில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.

ஆனால் மரணத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக தென்கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.

டெயகு நகரில் உள்ள தேவாலயத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வழிபாட்டில் பங்கேற்ற பின்னர் மருத்துவமனைக்குச் சென்றபோது கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அந்த வழிபாட்டில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கிருமி தொற்றியதாக கண்டறியப்பட்டது. புதிய 22 நோயாளிகளையும் சேர்த்து இதுவரை தென்கொரியாவில் 104 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை புதன்கிழமை இரவு நிலவரப்படி 2,118ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் மட்டும் அங்கு 114 பேர் உயிரிழந்தனர்.

#கொரோனா #சிங்கப்பூர் #ஜப்பான் #தமிழ்முரசு