‘கொவிட்-19: சிங்கப்பூரில் கவலைக்கிடமான நிலையில் பங்ளாதேஷ் ஊழியர்’

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்கள் ஐவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஏகே அப்துல் மோமென் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 42வது நபர் அவர்.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கு முன்பே சுவாசப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை, நிமோனியா போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்றைய நிலவரப்படி, கடந்த 14 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தும் அந்த 39 வயது ஆடவரின் உடல்நிலை மேம்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.

“அவருக்கு மிக உயர்ந்தபட்ச சிகிச்சைகளை சிங்கப்பூர் அரசாங்கம் அளித்து வருகிறது,” என்றும் திரு மோமென் செய்தியாளர்களிடம் சொன்னதாக பங்ளாதேஷ் ஆங்கில ஊடகமான ‘தி டெய்லி ஸ்டார்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மாதம் முதல் தேதி அவருக்கு கிருமித்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட கிருமித்தொற்று தகவல் தெரிவித்தது. முதலில் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற அவர், கடந்த 7ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்றார்.

அதே நாளில் பிடோக் பலதுறை மருந்தகத்துக்குச் சென்ற அவர், பின்னர் சாங்கி பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அதற்கு அடுத்த நாள் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் தேசிய தொற்று நோய் தடுப்பு நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் கட்டுமானத் தளத்துடன் தொடர்புடைய 5 கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று இவருடையது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக அவர் முஸ்தஃபா நிலையத்துச் சென்றிருந்தார்; காக்கி புக்கிட் ரோட்டில் இருக்கும் லியோ தங்குவிடுதியில் தங்கியிருந்தார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பங்ளாதேஷின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமெனுடன் தொலைபேசி வழி உரையாடி இந்த நோயாளி குறித்த தகவல்களை நேற்று முன்தினம் தெரிவித்ததாக தூதரகம் தெரிவித்தது.

நேற்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொடர்பில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

#கொரோனா #சிங்கப்பூர் #பங்ளாதேஷ் ஊழியர் #வெளிநாட்டு ஊழியர்