சீனாவில் காட்டு விலங்குகளை உட்கொள்ள, விற்க தடை

காட்டு விலங்குகளை உட்கொள்வது, வர்த்தகம் போன்றவற்றுக்கு சீனா தடை விதித்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று போராட்டத்தில் வெற்றிகொள்ள இது உதவும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டு விலங்குகளை உட்கொள்வது, வர்த்தகம் போன்றவற்றுக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்ட தடையை அடுத்து அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதாக நேற்று (ஜனவரி 24) வெளியான அந்த அறிவிப்பு தெரிவித்தது.

புதிய கொரோனா கிருமி விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவதாக சீன ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால், அதற்கு வலுவான ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. 

சீனாவில் மட்டும் சுமார் 2,700 பேரைப் பலிகொண்டுள்ள இந்த கொரோனா கிருமித்தொற்று தற்போது உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் உள்ள வனவிலங்கு சந்தையுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களுக்கு இந்த கிருமித்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சந்தையில் வௌவால்கள், பாம்புகள், புனுகுப்பூனைகள் ஆகியவை விற்கப்படுவது வழக்கம்.

சட்ட விரோதமாக காட்டு விலங்குகளாக வகைப்படுத்தப்பட்ட விலங்குகளை உட்கொள்வது, அவற்றின் வர்த்தகத்தில் ஈடுபடுவது, அவற்றை வேட்டையாடுவது, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வது போன்றவற்றுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்புவரை கழுதை, நாய், மான், முதலை உட்பட பல விலங்குகளின் மாமிசம் அங்கு விற்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

#வூஹான் #கொரோனா #கொவிட்-19 #சீனா