சட்ட அமைச்சர் எச்சரிக்கை: விதிமீறினால் கடும் நடவடிக்கை

கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் அரசாங்கம் அறிவித்துள்ள விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்கமாட்டார்கள் என சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எச்சரித்துள்ளார்.

விதிமீறிய சீன நாட்டவர் மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (பிப்ரவரி 26) அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அந்த மூவரில் முதலாமவர் நிரந்தரவாசத் தகுதிபெற்ற 45 வயது ஆடவர். 

இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை அவர் இங்கு இருந்தபோது, வீட்டிலேயே இருக்கவேண்டும் என்ற உத்தரவை மீறியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அதன் விளைவாக, அவரது நிரந்தரவாசத் தகுதி பறிக்கப்பட்டது. அவரால் இனி சிங்கப்பூருக்குள் நுழையவும் முடியாது.

“14 நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்ற விதியை அவர் வேண்டுமென்றே மீறியுள்ளார். தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. இல்லத் தடுப்புக் காலம் முடிவதற்கு முன்பே அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றார்,” என்று திரு சண்முகம், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“சிலர் இது சற்று கடுமையான நடவடிக்கை எனச் சொல்லலாம். ஆனால், இப்போதைய சூழலில், வேண்டுமென்றே விதிமீறுவோர் மீது உடனடியாக, உறுதியான நடவடிக்கை தேவைப்படுகிறது,” என்றார் அவர்.

இதர இருவரும் சீனத் தம்பதியர். 

அவர்கள் தாங்கள் சென்று வந்த இடங்கள் குறித்து சுகாதார அமைச்சு அதிகாரிகளிடம் தவறான தகவல் தந்ததாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அறிய முயன்றதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவ்விருவர் மீதும் தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்படுவர் என்று கூறப்பட்டது.

“கொரோனா கிருமி பரவாமல் கட்டுப்படுத்துவதில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அறிவது மிக முக்கியம்,” என்றார் அமைச்சர் சண்முகம்.

“இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என்பதை மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #தமிழ்முரசு