பங்ளாதேஷ் ஊழியரின் கர்ப்பிணி மனைவி உருக்கம்: ‘தந்தையாகப் போகிறார்; அவர் உயிருடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்’

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படும் பங்ளாதேஷ் ஊழியருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகச் சொல்லும் அவரது மனைவி அவரை ஊருக்குத் திரும்பி வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த பங்ளாதேஷ் ஊழியர், சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 42வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மூன்று வாரங்களாக தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த ஊருக்குச் சென்றிருந்த அந்த ஊழியர், அங்கு மூன்று மாதங்களுக்குத் தங்கியிருந்ததாக பங்ளாதேஷின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் அவரது மனைவி குறிப்பிட்டார்.

ஸ்ட்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசிய அவர், “அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். அவர் விரைவில் தந்தையாகப் போகிரார். அவர் வீட்டுக்கு வரவேண்டும். தயவுசெய்து, அவர் உயிருடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்,” என்று உருக்கமாக கண்ணீருடன் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் நிலையம் வழியாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அவர், தனது பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். தங்களது அடையாளம் வெளியில் தெரிந்தால் சொந்த நாட்டில் பலரது கருத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார் அவர்.

சிலேத்தார் கட்டுமானத் தளத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் ஊழியர் அவர். மேலும் நால்வர்  அதே வேலையிடத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர் காக்கி புக்கிட்டில் இருக்கும் தி லியோ தங்குவிடுதியில் தங்கியிருந்தார்.

அவர் சிங்கப்பூரில் சுமார் பத்தாண்டுகளாகப் பணிபுரிவதாகக் கூறப்பட்டது.

கொரோனா கிருமித்தொற்று பரவல் குறித்து தமது மனைவியை தொலைபேசி வழியாக எச்சரிக்க அந்த ஊழியர், அவரை கவனமாக இருக்கச் சொன்னார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மனைவியுடன் பேசிய அவர், தாம் நலமாக இருப்பதாகக் கூறினாராம்.

அவருக்கு ஏற்பட்டிருந்தது சாதாரண சளிக்காய்ச்சல் என்று நினைத்ததாகச் சொன்னார் அந்தப் பெண்.

தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவது ஆகியவற்றைக் குறிப்பிட்டு, “இதெல்லாம் நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று வருந்தினார் அவர். 

“தினமும் என்னுடன் தொலைபேசி வழியாகப் பேசுவார்; மிகவும் மகிழ்ச்சியான ஆள்,” என்று தனது கணவரைப் பற்றி குறிப்பிட்ட அவர், “என் கணவர் அவரது நான்கு சகோதரிகளையும் நன்கு கவனித்துக்கொள்வார்,” என்றார்.

அந்தக் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆடவர் இந்த ஊழியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கணவரின் உடல்நலம் குறித்த தகவல்களைத் தமக்கு அவ்வப்போது வழங்கும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அந்தப் பெண், “என் கணவர் விரைவில் குணமடைய வேண்டும் என நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்,” என்றார்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #பங்ளாதேஷ் ஊழியர் #தமிழ்முரசு