கொவிட் -19 பற்றி சிங்கப்பூர் நிபுணர்கள்: உடல்நலம் தேறியவர்களிடமிருந்து கிருமி பரவாது

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்  நேற்று வரை 62 பேர் சிகிச்சைக்குப்பின் உடல்நலம் தேறி, வீடு திரும்பிவிட்டனர்.

இப்போது அவர்களுக்குக் கிருமித்தொற்று அறவே இல்லை என்றும் அவர்களிடம் இருந்து கிருமி மற்றவர்களைத் தொற்றாது என்றும் தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு நிலைய நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

நோயாளிகளின் மூச்சுக்குழாயில் இருந்து உயிருடன் கிருமி வெளிப்படுகிறதா என மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று தொற்றுநோய்கள் தடுப்பு நிலையத்தின் இயக்குநரும் பேராசிரியையுமான லியோ யீ சின் கூறினார்.

முழுமையாகத் தேறியவர்களிரிடம் இருந்து கிருமி வெளிப்படாது என்றார் திருவாட்டி லியோ

“நோயாளிகள் மருத்துவரீதியாக முழுமையாகத் தேறிவிட்டனர் என்றும் அவர்களிடம் இருந்து கிருமி வெளிப்படவில்லை என்பதைச் சோதனைகள் மூலம் உறுதிசெய்த பின்னர்தான் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

அதாவது, அவர்கள் தும்மினாலும் அல்லது இருமினாலும் மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய கொரோனா கிருமி வெளிப்படாது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் முழுமையாகக் தேறிவிட்டார் என்பது உறுதியானாலும் அவர் குறைந்தது மேலும் 24 மணி நேரத்திற்குப் பின் மேற்கொள்ளப்படும் இரண்டாவது சோதனை முடிவுகளிலும் அவர் தேறிவிட்டார் என உறுதிசெய்யப்பட்ட பிறகே அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவதாக பேராசிரியை லியோ  குறிப்பிட்டார்.

சீனாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, உடல்நலம் தேறிய எழுவரில் ஒருவரை மீண்டும் கிருமி தொற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்களின் மலத்தில்தான் கிருமி இருந்தது கண்டறியப்பட்டது.

‘சார்ஸ்’ பரவலின்போது, பாதிக்கப்பட்ட ஒருவர் உடல்நலம் தேறிய பிறகும் அவரது மலத்தில் நான்கு வார காலத்திற்குக் கிருமி இருந்ததைத் தரவுகள் காட்டுகின்றன என்றார் டாக்டர் வாசு.

“மூச்சின்போது வெளிப்படும் துளிகள் மூலமே கொரோனா பரவி வருவதால், அப்படி ஒருவரின் மூச்சிலிருந்து வெளியேறும் துளிகளில் கிருமி இல்லை எனில், அவர்கள் மூலம் மற்றவர்களுக்குக் கிருமித்தொற்று பரவாது,” என்று தொற்றுநோய்கள் தடுப்பு நிலைய மருந்தக இயக்குநர் டாக்டர் ஷான் வாசு சொன்னார். 

அத்துடன், இப்போதைக்குக் கடைப்பிடிக்கப்படும் நவீன சுகாதார வழிமுறைகளால், ஒருவரின் மலத்தில் கிருமி இன்னும் உயிர்ப்புடன் இருந்தாலும் அதன்மூலம் கிருமி பரவாது என்றும் அவர் கூறினார்.

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #தமிழ்முரசு