யாத்ரிகர்களுக்குத் தற்காலிக தடை விதித்திருக்கும் சவூதி

ரியாத்: மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா கிருமித்தொற்று பரவுவதை அடுத்து, புனிதப் பயணமாகவும் சுற்றிப் பார்க்கவும் வரும் வெளிநாட்டவர்களுக்கு சவூதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இஸ்லாமிய புனிதத் தலங்களான மெக்காவிற்கும் மதினாவிற்கும் ஆண்டு முழுவதும் பல நாடுகளில் இருந்து மில்லியன்கணக்கானோர் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் யாத்திரையின்போது அவர்களின் எண்ணிக்கை உச்சமாக இருக்கும். 

கடந்த அக்டோபரில் 49 நாடுகளுக்குப் புதிய சுற்றுப்பயண விசாவை அறிமுகம் செய்த சவூதி, இதுவரை  கிட்டத்தட்ட 400,000 பேருக்கு அத்தகைய விசாவை வழங்கியுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கு விதித்துள்ள தடை தற்காலிகமானதுதான் என சவூதி வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதேசமயம், அந்தத் தடை எப்போது முடிவுக்கு வரும் எனக் குறிப்பிடவில்லை. இந்தத் தடை அறிவிப்பு, இவ்வாண்டு ஜூலை மாதப் பிற்பகுதியில் தொடங்கவிருக்கும் ஹஜ் யாத்திரையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

ஈரான், ஈராக் உள்ளிட்ட அண்டை நாடுகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சவூதியில் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை. 

இதனிடையே, சவூதியின் தற்காலிகத் தடை அறிவிப்பை மதிப்பதாகக் கூறியுள்ள இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்தோனீசியாவில் எவரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதால் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் சமய விவகாரங்களுக்கான அமைச்சு கோரிக்கை விடுத்து இருக்கிறது.