கப்பலில் 16 இந்திய ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று

ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பானில் உள்ள யோக்கோஹாமா துறைமுகத்துக்குச் சென்ற டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர். 

அவர்களில் 16 பேருக்கு (கப்பல் ஊழியர்கள்) கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவ்வப்போது விசாரித்துவருகின்றனர்.

வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்கள் நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து 119 இந்தியர்கள் உட்பட 124 பேர் தனி விமானம் மூலம் நேற்று (பிப்ரவரி 27) புதுடெல்லிக்குச் சென்றடைந்தனர். 

மற்ற மூன்று இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் நிறைவடையாததால் கப்பலிலேயே தங்கி இருக்கின்றனர்.

இந்தியர்களுடன் 5 வெளிநாட்டினரும் விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர்  இலங்கையைச் சேர்ந்தவர்கள். நேப்பாளம், தென்னாப்பிரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உட்பட விமானத்தில் அழைத்துவரப்பட்ட அனைவரும் ஹரியானாவில் உள்ள ராணுவ சிறப்பு மருத்துவ முகாமில் 14 நாட்களுக்குக் கண்காணிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர். 

#ஜப்பான் #டைமண்ட் பிரின்சஸ் #இந்தியர்கள் #கொரோனா