‘சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் பணிப்பெண் இறந்ததாக பரவும் செய்தி உண்மையில்லை’

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண் ஒருவர் இறந்துபோனதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தியை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.

அந்த வதந்தி பற்றித் தெரியும் என்று இன்று (பிப்ரவரி 28) தெரிவித்த அமைச்சு, அது உண்மையில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றது.

அந்தப் பெண்ணுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவருக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

“28 பிப்ரவரி 2020 அன்று மாலை 4 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் உயிரிழப்பு ஏதுமில்லை,” என்று கூறிய சுகாதார அமைச்சு, ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

வியாழக்கிழமை வரை சிங்கப்பூரில் 96 கொவிட்-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 66 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.  சிகிச்சை பெற்று வரும் 30 நோயாளிகளில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு வெளியே 70க்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த கிருமித்தொற்று காரணமாக சீனாவில் 78,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், சுமார் 2,800 பேர் உயிரிழந்தனர். 

#கொரோனா #கொவிட்-19 #சிங்கப்பூர் #பணிப்பெண் #வதந்தி