கொரோனா பாதிப்பு வராது என எந்த நாடும் கருதக்கூடாது

ஜெனிவா: கொரோனா கிருமி தங்களைப் பாதிக்காது என்று எந்தவொரு நாடும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. ஈரான் முதல் ஆஸ்திரேலியா வரை எல்லா நாடுகளும் கிருமியைக் கட்டுப்படுத்த வேகமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொவிட்-19 கிருமி உலகின் 40 நாடுகளுக்கும் மேல் பரவி விட்டது. சீனாவில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் மற்றும் மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதற்கு வெளியில் உள்ள நாடுகள் பலவற்றிலும் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உலகின் இரண்டாவது பாதிப்பு நாடாக தென்கொரியா உள்ளது.

இந்நிலையில், செல்வ வளம் கொழிக்கும் நாடுகளைக்கூட இந்தக் கிருமி விட்டுவைக்காது என்பதால் அவையும் அதனைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாலியைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “நம்மை கிருமி தாக்காது என்று எந்த நாடாவது கருதினால் அது பெருந்தவறாகிவிடும். எனவே அந்தத் தவற்றுக்கு எந்த நாடும் இரையாகிவிடக்கூடாது,” என்றார். 

ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொவிட்-19 கிருமி வேகமாகத் தொற்றக்கூடியது என்றார்.