சிங்கப்பூரில் மேலும் 21 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து, இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,786ஆக உள்ளது.
சமூக அளவில் மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, கிருமி தொற்றியவர்கள் சென்றிருந்த இடங்களின் பட்டியலில் ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்கேட், 313@சாமர்செட், அங் மோ கியோ ஹப், தி ஷாப்ஸ் அட் மரினா பே சேண்ட்ஸ் ஆகிய கடைத்தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் உள்ள ‘கிரெய்ன் ஏலி’ கடை, சன் பிளாசாவில் உள்ள ‘ஸ்டார்பக்ஸ்’ காப்பிக் கடை ஆகியவற்றுக்கும் கிருமி தொற்றியவர்கள் சென்றிருந்தனர். கடந்த மாதம் 23க்கும் 29ஆம் தேதிக்கும் இடையில் மேற்கூறப்பட்ட இடங்களுக்கு அவர்கள் சென்றிருந்தனர்.
சிங்கப்பூரில் சமூக அளவில் மூவர் உட்பட 23 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. சமூக அளவில் கிருமி தொற்றிய அந்த மூவரும் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர், மற்றொருவர் நிரந்தரவாசி. எஞ்சிய இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
கடந்த மாதம் 12ஆம் தேதி அந்த சிங்கப்பூரர் இந்தியாவிலிருந்து இங்கு வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த நிரந்தரவாசி இந்தோனீசியாவிலிருந்து இங்கு வந்தார். வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களான எஞ்சிய இருவரும் கடந்த மாதம் 18ஆம் தேதி பிலிப்பீன்சில் இருந்து இங்கு வந்தனர். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.