கொரோனா கிருமித்தொற்றால் திண்டாடும் இந்தியாவுக்கு கூகல் நிறுவனம் ரூ.135 கோடி நிதி உதவி வழங்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனமும் இந்தியாவுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “கூகல் நிறுவனம், யுனிசெஃப் மூலமாக மருத்துவப் பொருட்கள் வாங்க ரூ.135 கோடி நிதியுதவி அளிக்கும். ஆபத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்யவும் சரியான தகவல்களைப் பரப்ப உதவி செய்வோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளேன். இந்தியாவுக்கு அமெரிக்க அரசு உதவ முன்வந்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். மைக்ரோசாப்ட் தொடர்ந்து அதன் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு பயன்படுத்தும். மேலும், ஆக்சிஜன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் மைக்ரோசாப்ட் உறுதுணையாக இருக்கும்,” என பதிவிட்டுள்ளார்.