புகழ்பெற்ற பாலித் தீவை மீண்டும் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடும் முயற்சியில் இந்தோனீசியா இறங்கியுள்ளது.
பாலியைப் படிப்படியாகத் திறக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று இந்தோனீசியாவின் சுற்றுப்பயணத் துறை அமைச்சர் திரு சண்டியாகா உனோ கூறியுள்ளார். இதைக் கவனமாக அணுகுவதே தமது பரிந்துரை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
புதிய வகை கொவிட்-19 கிருமிகள் உருவெடுக்கக் காத்திருப்பதால் தற்போது சிறிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அவர் சுட்டினார். கடந்த ஜூலை மாதத்தில், அதுவரை காணாத அளவில் டெல்டா வகை கொவிட்-19 கிருமி இந்தோனீசியா முழுவதும் பரவியது. அப்போது முடக்கநிலை முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாலியும் ஒன்று.
அதனால், ஆண்டுதோறும் பொதுவாக ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகளை வரவேற்கும் பாலி முடங்கிப்போனது.
அங்குப் பொதுவாக பரபரப்பாக இருக்கும் ஹோட்டல்களும் கேளிக்கை இடங்களும் இப்போது களையிழந்து காணப்படுகின்றன. எனினும், இந்தோனீசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாலும் அங்கு அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாலும் புது நம்பிக்கை பிறந்துள்ளது.
மேலும், அந்நாட்டின் தடுப்பூசி போடும் விகிதம் பணக்கார நாடுகளின் விகிதத்துடன் ஒப்பிடக்கூடிய அளவு சிறப்பாக உள்ளதெனக் கூறப்படுகிறது.
அண்மையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு புக்கெட் தீவைத் திறந்துவிட தாய்லாந்து ஒரு திட்டத்தை அறிவித்தது.
அதுபோன்ற முன்னோட்டத் திட்டத்தின்மூலம், பாலியைச் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிட திரு சண்டியாகா எண்ணம் கொண்டுள்ளதாகச் சில ஊடகங்கள் கூறுகின்றன.