கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் இருக்கும் வேலைகளால், ஐந்து முதல் எட்டு வயது வரையிலான பிள்ளைகள் கொண்ட பெற்றோரில் 70 விழுக்காட்டினரால் பிள்ளைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட முடியவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 48 விழுக்காட்டினர்தான் பிள்ளைகள் தங்கள் கவனத்தைக் கோரும்போது, மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உணர்வுகள் ஏற்படுவதாகக் கூறினர்.
அந்த நேரத்தில் எரிச்சல் அடைவதாக அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாக கால்வாசி பேர் தெரிவித்தனர்.
ஃபோக்கஸ் ஆன் தி ஃபேமிலி எனும் அறநிறுவனம், செப்டம்பர் 7 முதல் 20ஆம் தேதி வரை, 175 பேரிடம் அந்த ஆய்வை நடத்தியது.
கொவிட்-19 தொடர்பான சிங்கப்பூரர்களின் மனநிலையைக் காட்டும் மற்ற ஆய்வுகளுடன் இந்த ஆய்வும் ஒத்துப்போகிறது.
தற்போதைய கொவிட்-19 கட்டுப்பாடுகள் சவாலானவை என்றபோதும், நிலைமை மிகவும் மோசம் என்ற எண்ணத்தைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று ஃபோக்கஸ் ஆன் தி ஃபேமிலி அமைப்பில் பணியாற்றும் குடும்பநல நிபுணர் சூசன் கோ கூறினார். பெற்றோரின் மன அழுத்தத்தை பிள்ளைகள் உணர்வார்கள் என்று அவர் சுட்டினார்.
பெற்றோர் நீக்குப்போக்காக நடந்துகொள்வதுடன் எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்றார் திருவாட்டி கோ.
அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த நேரம் இனிதாக அமைய, அவர்கள் குடும்பச் சூழலை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நேரத்தை ஒழுங்காகத் திட்டமிட்டு கழிப்பதும் முக்கியம் என்று சமூகப் பங்காளித்துவ நிர்வாகியாகப் பணியாற்றும் திருவாட்டி வீணா சுப்பிரமணியம் தெரிவித்தார். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அதே நேரத்தில் பிள்ளைகள் பொழுதைப் போக்க தேவையானவற்றைச் செய்ய சிரமப்பட்டதாக அவர் கூறினார். பிள்ளைகளிடம் எரிச்சல் அடைந்ததற்காக தம்மை நொந்துகொண்டார்.
நிலைமை சீராக ஆறு மாதம் பிடித்தது. மகள்களுடன் சேர்ந்து அவர்களுக்கான நடவடிக்கைகள் அடங்கிய அட்டவணையை திருமதி வீணாவும் அவரது கணவரும் வரைந்துள்ளனர்.
குறிப்பாக, தமக்கு முக்கியமான வேலைகள் இருக்கும்போது பிள்ளைகள் தங்களுக்கு மிகவும் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வீணா உறுதி செய்வார்.
மகள்களுக்குக் கேளிக்கைச் சவால்களை விடுத்து அவற்றுக்காக பரிசுகளையும் பெற்றோர் அளிக்கின்றனர்.