கொவிட்-19க்குப் பிந்திய சூழலில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை வரவேற்பதற்கான முயற்சிகளை ஐக்கிய அரபு சிற்றரசுகள், இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்பு வெளிநாட்டுப் பயணிகளுக்கான இலவச விசா வழங்குவதற்கான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த அறிவிப்பு எதையும் இந்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.
கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் பாதுகாப்பு வளைய ஏற்பாடுகளின்கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்துலக விமானச் சேவைகளை இந்தியா இன்னும் தொடங்காதது, சுற்றுப்பயணத்துறை மீண்டும் எழுச்சியடைவதற்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது.
இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்று தமிழகம். 2019 வரையிலான ஆறு ஆண்டுகளில் ஆக அதிக வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, துபாய்க்கும் மாலத்தீவுகளுக்கும் பயணம் மேற்கொள்வதற்கான தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலங்கை தனது எல்லைகளை மீண்டும் திறந்துள்ளது.
500,000 இலவச விசாக்களை வழங்குவது குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டவுடன், மலேசியா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வருவதற்கான தேவை நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது என்று சென்னையில் சுற்றுப்பயண முகவைச் சேர்ந்த ஸ்ரீஹரன் பாலன் கூறினார்.
“ஆன்மீக சுற்றுப்பயணத்திற்காக மலேசியாவிலிருந்து தமிழ் வம்சாவளியினர் தமிழகம் வர விரும்பினர். அதேவேளையில், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் முகவர்களிடமிருந்து எங்களுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன,” என்றார் அவர்.