ஏர்ஏஷியா குழுமத்தின் மலேசியப் பிரிவு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை மட்டுமே அதன் விமானங்களில் அனுமதிக்கும்.
உள்நாட்டு விமானச் சேவைகளைத் தொடர்வதற்கான ஆயத்தப் பணிகளை அக்குழுமம் மேற்கொண்டு வருகிறது. பிற்பாடு அனைத்துலக விமானச் சேவைகளையும் தான் தொடரவுள்ளதாக புதன்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்தது.
இன்னும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயதுக்கும் கீழ் உடையோர் விமானப் பயணம் மேற்கொள்ள, தடுப்பூசி போட்டுக்கொண்ட குடும்பத்தார் உடனிருக்க வேண்டும் என்று ஏர்ஏஷியா கூறியது.
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனம் கடந்த மாதம் கூறியிருந்தது. அதேபோன்ற அறிவிப்பு ஒன்றை ஏர் நியூசிலாந்து நிறுவனமும் இவ்வாரத் தொடக்கத்தில் வெளியிட்டிருந்தது.