இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் முன்மொழியப்பட்டிருந்த பாதுகாப்பான பயண வளையத் திட்டம் (travel bubble) ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்திருப்பதே அதற்குக் காரணம் என்று ரியாவ் தீவுகளுக்கான ஆளுநர் அன்சார் அகமது நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) கூறினார்.
ரியாவ் தீவுகளைச் சேர்ந்த பாத்தாம், பிந்தான் ஆகிய தீவுகளுக்கு இந்தப் பயண வளையம் முன்மொழியப்பட்டிருந்தது. சிங்கப்பூரிலிருந்து அதிகமானோர் அத்தீவுகளுக்கு சென்று வந்தனர். ஆனால், அது கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலுக்கு முந்தைய நிலவரம்.
இந்நிலையில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பயணிகளுக்கு ரியாவ் தீவுகள் அக்டோபரில் கதவுகளைத் திறந்துவிடும் என்று கடந்த மாதம் திரு அகமது கூறியிருந்தார்.
எனினும், சிங்கப்பூரில் உள்ள தற்போதைய தொற்று நிலவரத்தைக் கருதி, அந்தப் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவுக்கு அதிகமான பயணிகளை ஈர்க்க அந்தப் பயணத் திட்டம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.