லண்டன்: தனியார் ஆய்வகத்தில் நிகழ்ந்த தவறு காரணமாக இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 4,000 பேர்க்கு ‘கொரோனா இல்லை’ எனத் தவறாக பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, உல்வர்ஹேம்டனில் உள்ள அந்த ஆய்வகம், தனது செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி முதல் இம்மாதம் 12ஆம் தேதிவரை அந்த ஆய்வகம் வழங்கிய பரிசோதனை முடிவுகளில் தவறு நிகழ்ந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் தென்மேற்கு இங்கிலாந்துவாசிகள்.
ஆனால், வேல்ஸ் நாட்டிலும் இதனால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வேல்சிலும் இங்கிலாந்திலும் கொரோனா தொற்றிய பல ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்றும் அவர்கள் மூலம் தொற்று பரவி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து, தவறான முடிவு அளிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
அந்த ஆய்வகம் இதுவரை ஏறத்தாழ 400,000 கொரோனா பரிசோதனை மாதிரிகளைக் கையாண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.