சிட்னி: வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செல்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் டொமினிக் பெரொடெட் இதை இன்று தெரிவித்தார்.
எனினும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் ஆஸ்திரேலியக் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மட்டுமே இந்தத் தளர்வு பொருந்தும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் பின்னர் தெளிவுபடுத்தினார்.
ஆஸ்திரேலியக் குடிமக்களின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களும் ஆஸ்திரேலிய வர அனுமதிக்கப்படலாம் என்று திரு மோரிசன் கூறினார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள 80% மக்களுக்கு நாளை தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மீண்டும் உலகத்துடன் இணைய விரும்புவதாக முதல்வர் பெரொடெட் குறிப்பிட்டார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விதிக்கப்பட்ட கடும் பயணக் கட்டுப்பாடுகளால் ஆஸ்திரேலியக் குடிமக்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.
மேலும், அவர்கள் தற்போது இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
புதிய தளர்வால், குவாண்டஸ் போன்ற விமான நிறுவனங்கள் சிட்னிக்கு அனைத்துலகப் பயணங்களை முன்கூட்டியே தொடங்கப்போவதாகக் கூறியுள்ளன.
சிட்னிக்கு வாரத்தில் 17 விமான சேவைகளை இயக்கவிருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவை எல்லாவற்றிலும் பயணிகளுக்கு இடம் ஒதுக்கப்போவதாகக் கூறியது.