ஜூரோங்கில் உள்ள வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் விடுதியில் வசிக்கும் வெளிநட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு எதிர்பாராமல் உயர்ந்ததால், அவர்களைப் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பராமரிப்பு வழங்க அமைக்கப்பட்ட மனிதவள அமைச்சின் உத்தரவாத, பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுத் தலைவர் துங் யுய் ஃபாய் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) இதனைத் தெரிவித்தார்.
அந்த விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு முதலாளி ஒருவர் கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பலருக்கும் தொற்று உறுதியானதாக திரு துங் குறிப்பிட்டார்.
அந்த விடுதியில் வசிக்கும் பெரும்பாலான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பதை அவர் சுட்டினார்.
அந்த விடுதியில் வசிக்கும் 2,000 ஊழியர்களில் ஏறத்தாழ 500 பேருக்குத் தொற்று உறுதியானதாகக் கூறப்படுகிறது. அங்கு வசிப்பவர்களில் ஏறக்குறைய 1,400 ஊழியர்கள் ‘செம்ப்கார்ப் மரின்’ நிறுவனத்தைச் சேர்ந்தவரகள்.
ஜாலான் துக்காங் விடுதியில் பலரும் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணம் குறித்து மனிதவள அமைச்சு விவரிக்கவில்லை.
அந்த விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கும் விடுதி நிர்வாகத்திற்கும் இடையே புதன்கிழமை (அக்டோபர் 13) மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலவரத்தை ஆராய திரு துங் இன்று அங்கு வருகையளித்தார். அன்றைய தினம் நிலைமை மோசமாவதைத் தவிர்க்க, கலவரத் தடுப்பு போலிசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், விடுதி நடத்துநரும் முதலாளியும் இணைந்து விடுதிவாசிகளின் கவலைகளுக்குப் படிப்படியாக தீர்வுகண்டு வருவதாக திரு துங் தெரிவித்தார்.