பேங்காக்: அனைத்துலக எல்லைகளைத் திறந்துவிட தாய்லாந்து தயாராகிவரும் நிலையில், அதனை அந்நாட்டு மக்களில் பலரும் எதிர்ப்பது அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
உள்நாட்டில் போதுமான அளவில் இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் மூலமாக புதிதாக கொவிட்-19 தொற்று பரவலாம் என்று அவர்கள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் அடுத்த மாதம் 1ஆம் தேதியில் இருந்து தாய்லாந்திற்கு வரலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் பிரயுத் சான் ஓ சா அண்மையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பில் சுவான் துசிர் ராஜபாத் பல்கலைக்கழகம், தாய்லாந்து மக்களிடம் ஒரு கருத்தாய்வை மேற்கொண்டது. அதில் பங்குகொண்ட 1,392 பேரில் 59.86 விழுக்காட்டினர், பிரதமரின் அறிவிப்பை ஏற்கவில்லை. எல்லைகளைத் திறக்க இது சரியான நேரமல்ல என்று 60.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
உள்நாட்டில் 70 விழுக்காட்டினர்க்குமேல் தடுப்பூசி போட்டபிறகே எல்லைகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
தலைநகர் பேங்காக்கில் 65 விழுக்காட்டினர்க்குமேல் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில் அவ்விகிதம் 35 விழுக்காட்டை ஒட்டியே உள்ளது.