விரிவாக்கம் கண்ட தடுப்பூசிப் பயணத்தடத் திட்டம்: முதல் விமானம் நாளை சிங்கப்பூர் வந்திறங்கும்

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் இங்கு குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் நாடுகளின் பட்டியலை அண்மையில் சிங்கப்பூர் விரிவுபடுத்தியது.
சிங்கப்பூர் அதன் அடுத்தகட்ட எல்லைத் திறப்பு முயற்சி இது.
அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசிப் பயணத்தட சிறப்பு ஏற்பாட்டின்கீழ் (Vaccinated Travel Lane) முதல் விமானம் நாளை புதன்கிழமை சிங்கப்பூர் வந்துசேரும்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து புறப்படும் அந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்க்யூ329 விமானம், சாங்கி விமான நிலையத்தை நாளை அதிகாலை 5.55 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து புறப்படும் விமானம் நாளை மறுதினம் வியாழக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு சிங்கப்பூர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.